தமிழக அரசுக்கு, கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை காலத்தே முறையாக பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தாலும் கர்நாடக அரசு அதனை மீறி செயல்படுகிறது. தமிழகத்துக்கான நீர் வரத்தை கர்நாடகம் தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.20 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால் ஜூன் மாதத்தில் வெறும் 2.833 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது.
ஆக ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய பாக்கி தண்ணீரும் மற்றும் ஜூலை மாதத்திற்கான தண்ணீரும் கிடைத்தால் மட்டுமே தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்யமுடியும். அதாவது ஜூன் மாதத்திற்கான தண்ணீரை முறையாக, முழுமையாக
திறந்திருந்தால் மேட்டூர் அணைக்கு நீர் வந்து, அங்கிருந்து பாசனத்துக்கும் தண்ணீரானது சென்றிருக்கும்.
ஆனால் கடந்த ஆண்டுகளை விட இப்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்நிலையில் குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12 டி.எம்.சி ஆக குறைந்துள்ளதால், நாத்து நடும் விவசாயிகள் நடவு செய்யாமல் விட்டு விடலாமா என்ற கவலையில் உள்ளனர். மேலும் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்படி திறந்தால் தான் விவசாயிகள் தொடர்ந்து நடவு செய்து, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும்.
எனவே தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்