ராணுவ வீரர்களுக்குப் பொருட்கள் விற்பனை செய்யும் அம்பாலாவில் உள்ள கேண்டீன் ஸ்டோர் டிபார்ட்மென்ட் (சிஎஸ்டி) டிப்போவின் புதிய வளாகத்தைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் ஜூலை 05, 2023 அன்று திறந்து வைத்தார். பழைய சிஎஸ்டி டிப்போவின் நிலத்துக்குப் பதிலாக ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து வழித்தட நிறுவனத்தின் மூலம் இந்த வளாகம் கட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தானியங்கி மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கி ராணுவத்தினர், மூத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சிறந்த சேவையை வழங்கும், சிஎஸ்டியின் பணிகளைப் பாராட்டினார். ராணுவம் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 75 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக இந்தப் பிரிவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
1948 இல் நிறுவப்பட்ட சிஎஸ்டி, நாடு முழுவதும் 34 பிராந்திய டிப்போக்களைக் கொண்டுள்ளது. “பெருந்தொற்று காலத்தில் பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ததில் துறையின் பங்களிப்பு முன்மாதிரியாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருந்தது,” என்று அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கான திட்டங்களை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருவதையும் அவர் பாராட்டினார்.
எஸ்.சதிஸ் சர்மா