குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த இரண்டாவது மண்டலக் கருத்தரங்கை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போபாலில் இன்று நடத்தியது.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த இரண்டாவது ஒரு நாள் மண்டல கருத்தரங்கம் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இன்று (09.07.2023) நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்தக் கருத்தரங்கில் குழந்தைகள் நலக் குழுக்கள், சிறார் நீதிமன்ற பிரதிநிதிகள், கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடத்தப்படும் மண்டலக் கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபரா மகேந்திரபாய், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் திரு சஞ்சீவ் குமார் சத்தா, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் திரு பிரியங்க் கனுங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள்  நலன் தொடர்பான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில குழந்தைகள் ஆணையங்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி பாராட்டுத் தெரிவித்தார்.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “மிஷன் வாத்சல்யா” என்ற இயக்கத்தின் நோக்கங்களை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபரா மகேந்திரபாய் எடுத்துரைத்தார்.

சிறார் குற்றம் மற்றும் நீதிச் சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply