தமிழக அரசு. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தமிழக அரசு, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு படித்து பட்டம் பெற்றிருந்தாலும் அரசுப்பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படியே தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பணி கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
அதாவது ஆசிரியராகப் பணிபுரிய படிப்பை முடித்து விட்டு, வேலை கிடைக்காமல் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து, அரசுப்பணிக்காக தனித்தேர்வு எழுதி அரசுப்பணிக்காக காத்திருக்கும் நிலையே நீடிக்கிறது.
பொதுவாக ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி கொடுத்திருக்க வேண்டும்.
இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வு என்று ஒன்றை நடத்தி, அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலம் கடந்தும் இன்னும் அரசு ஆசிரியராகப் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் படித்து, பட்டம் பெற்று, அரசு ஆசிரியராக பணியாற்ற தகுதியுள்ளவர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பமும் பொருளாதார ரீதியாக பெரிதும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள்.
குறிப்பாக 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பணிக்கான ஒரு மறுநியமனத் தேர்வை ரத்து செய்யவும், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 என்பதை நீக்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவச்செல்வங்களின் கல்வி, வருங்கால முன்னேற்றம் அதன் மூலம் மாநில வளர்ச்சி, நாட்டின் உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் ஆசிரியர் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே தமிழக அரசு. 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணியின்றி தவிக்கும் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
எஸ்.திவ்யா