மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில் 2023 ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஃபிரான்சிடம் இருந்து இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக 26 ரஃபேல் விமானங்களையும், அதனுடன் தொடர்புடைய துணை உபகரணங்கள், ஆயுதங்கள், உதிரிபாகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் வாங்க இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மற்ற நாடுகளில் இதே திறன்களுடன் உள்ள விமானங்களின் கொள்முதல் விலையை ஒப்பிட்டு, அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகே விலை மற்றும் பிற கொள்முதல் விதிமுறைகள் குறித்து ஃபிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மசாகான் டாக் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இதேபோல், உள்நாட்டுத் தயாரிப்புகளை அதிகப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறையில் உள்ள சிக்கலான தொழில்நுட்பங்களைத் உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம் இது தற்சார்பை அடைய உதவும்.
எஸ்.சதிஸ் சர்மா