செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது! செந்தில் பாலாஜி உட்பட அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டவர்தான்!-தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் அவர் நிரூபிக்க வேண்டும்!- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு.

Hon’ble Thiru. Justice C.V. KARTHIKEYAN.

downloaded-9

செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி உட்பட அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டவர்தான். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் அவர் நிரூபிக்க வேண்டும். ஏற்கெனவே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்திருந்த இரு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பரத சக்ரவர்த்தியின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு மூன்றாவதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று (14.07.2023) தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகிய இருவரும் அளித்த மாறுபட்ட தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Honble-Tmt.-Justice-J.-Nisha-Banu.

Honble-Mr.-Justice-D.Bharatha-Chakravarthy.

downloaded-1-2

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

downloaded-9

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில் நடந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்” என்று வாதிட்டிருந்தார்.

அதேபோல் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. கைது நடவடிக்கை சரியானது தானா? என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு என்பது, ஜாமீன் வழங்க மறுத்ததுதான்” என்று வாதிட்டிருந்தார். இதையடுத்து, மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (14.07.2023) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின்படி, அமலாக்கத் துறையினர் காவல் துறை அதிகாரிகள் அல்ல. அமலாக்கத் துறையினருக்கு சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளின்போது விசாரணை நடத்தவும், வாக்குமூலம் பெறவும் மட்டுமே அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆதரங்களையும் சேகரித்த பிறகுதான், நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும். கைது செய்யப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்ய முடியாது. நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதே தவிர, தங்களுடைய காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்ற அமலாக்கத் துறையின் வாதம் தவறானது. இது தொடர்பாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தை நாடி விளக்கம் பெற்றிருக்க வேண்டும்” என்று தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் இதுதொடர்பாக சில சட்ட விளக்கங்களை சுட்டிக்காட்டி, காவேரி மருத்துவமனை செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள சில மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த தீர்ப்பு விவரம்: அமலாக்கத் துறைக்கு காவல் துறையினரைப் போல காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி இந்த வழக்கில் பிரதானமாக பார்க்கப்பட்டது. அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், அமலாக்கத் துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் இல்லை என்று கூறியிருந்தாலும் கூட, அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியில்லை என்று கூறவில்லை. எனவே, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.

தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்குத்தான் உள்ளது. எனவே, அவர் விசாரணையை தடை செய்ய முடியாது. கைதுக்கான காரணங்களை பெற மறுத்துவிட்டு, பிறகு கைதுக்கான காரணங்கள் அவருக்கு தெரியாது என்று அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. கைது செய்ய அதிகாரம் உள்ளபோது, காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோர முடியாது. அவர்கள் விசாரணக்கு ஒத்துழைக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யும் வரை, விசாரணையை தொடரலாம். இந்த வழக்கில், அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகுதான் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது. அந்த வகையில், அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த இடத்தில், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதோடு, அதில் உடன்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் காலத்தை, அதாவது ஒருவர் கைது செய்யப்பட்டால், முதல் 15 நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டால், அவரை காவலில் வைத்து விசாரிக்க முடியாது. இதுதான் சட்ட நடைமுறை.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நாட்களை நீதிமன்றக் காவலில் இருந்ததாக கருதக் கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 15 நாட்கள் நீதிமன்ற காவல் காலத்தில் விலக்கு கொடுக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வியையும் நீதிமன்றம் ஏற்கெனவே எழுப்பியிருந்தது. இது தொடர்பாகவும் இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், “காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தபோதும், காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், செந்தில் பாலாஜியின் உடல்நிலை விசாரணைக்கு சாதகமாக இல்லாததால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்று அமலாக்கத் துறை பதிலளித்திருக்கிறது. சட்டங்கள் மற்றும் பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, 15 நாட்களுக்குப் பிறகும், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கலாம். நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை அமர்வு நீதிமன்றமும் ஏற்கவில்லை.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களிலும் அமர்வு நீதிமன்றம் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதுக்கான காரணங்களைப் பொறுத்தவரை, காலை முதல் செந்தில் பாலாஜியின் வீட்டில்தான் அமலாக்கத் துறையினர் இருந்துள்ளனர். இதனால், நீதிமன்ற காவலில் வைத்த பிறகு செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதிலிருந்து நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்த பின் அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை.

செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். பலமுறை சம்மன் அனுப்பி, செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரிலும், ஆடிட்டர் மூலமாகவும் ஆஜராகியிருக்கிறார். அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கை எதிர்த்து அவர் வழக்கு தொடரவில்லை. இவரது கைது குறித்து அவரது சகோதரர் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது” என்று தீர்ப்பளித்துள்ளார். இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்ற கேள்விக்கு, மேற்கூறிய காரணங்களால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கதக்கதல்ல. இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்த இரு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பரத சக்ரவர்த்தியின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். இந்த தீர்ப்பை தலைமை நீதிபதிக்கு சமர்ப்பிக்கவும் பதிவுத் துறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply