ஜூலை 17 முதல் 31 வரை இந்திய- மங்கோலிய கூட்டு ராணுவப் பயிற்சி.

43 வீரர்கள் அடங்கிய இந்திய ராணுவக் குழு இன்று மங்கோலியா புறப்பட்டது. ஜூலை 17 முதல் 31 வரை மங்கோலியா நாட்டின் உலாந்பாதரில் நடைபெறும் “நோமேடிக் எலிஃபன்ட்-23” என்ற 15-வது கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தக் குழு பங்கேற்கும். இந்த வருடாந்திர கூட்டுப் பயிற்சி, மங்கோலியாவிலும், இந்தியாவிலும், மாறி மாறி நடைபெறுகிறது.

மங்கோலிய ஆயுதப்படையின் 084 பிரிவு மற்றும் இந்திய ராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை பிரிவு வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வார்கள். இதற்காக ஜூலை 16-ஆம் தேதி இந்திய விமானப் படையின் சி -17 விமானத்தில் இந்திய ராணுவக் குழு உலாந்பாதர் புறப்பட்டது. இரு நாட்டுப் படைகளுக்கு இடையே நேர்மறையான ராணுவ உறவை கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, நல்லுறவு மற்றும் நட்பை மேம்படுத்துவது முதலியவை இந்த பயிற்சியின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபை ஆணையின் கீழ் மலைப்பகுதிகளில் தீவிரவாத எதிர் தாக்குதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது இதன் முக்கிய கருப்பொருளாகும்.

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பில் இந்தியாவும் மங்கோலியாவும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே உள்ள இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்திற்கும், மங்கோலிய ராணுவத்திற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி மேலும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply