புதுதில்லியில் இன்று (ஜூலை 18, 2023) மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பூமி சம்மான் 2023 விருதுகளை வழங்கினார். டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தில் சிறந்து விளங்கிய மாநிலச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கிராமப்புற வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார். பெரும்பாலான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நிலத்தை நம்பியிருப்பதால், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு, நிலப் பதிவேடுகளை நவீனமயமாக்குவது அடிப்படைத் தேவை என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் மயமாக்கல் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
வெள்ளம் மற்றும் தீ போன்ற பேரிடர்களால் ஆவணங்கள் தொலைந்து போனால் இவை பெரும் உதவியாக இருக்கும் எனவும் குடியரசுத் தலைவர் சுட்டிக் காட்டினார். நிலம் தொடர்பான தகவல்களை இலவசமாகவும், எளிதாகவும் அளிப்பதும் பெற்றுக்கொள்வதும் பல நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்