மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இன்று புதுதில்லியில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பிரெண்டன் ஓ’கானரை சந்தித்தார். கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்புகள் குறித்தும், இந்த உறவுகளை எவ்வாறு விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது என்பது குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
ஆஸ்திரேலியா அதன் இயற்கை வளங்களான கனிமங்களை நிர்வகித்த விதத்தையும், அதன் மக்களின் திறனை கட்டியெழுப்பிய விதத்தையும் பாராட்டிய திரு பிரதான், அத்தகைய செயல்முறைகளை இந்தியாவில் பிரதிபலிப்பதற்கான வழிகளை இரு நாடுகளும் ஆராய வேண்டும் என்றும், வளர்ந்து வரும் வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கூறினார். வேளாண் தொழில்நுட்பம், சுரங்கம், நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற துறைகள் விரிவாக ஆராயப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே வரலாற்று உச்சத்தில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒத்துழைப்புக்கு இது சிறந்த தருணம் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான தகுதியை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், இரு நாடுகளுக்கும் இடையில் மாணவர்கள் மற்றும் திறமையான நபர்களின் இருவழி போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் அதைச் செயல்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் காந்திநகரில் நடைபெறும் ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சிலின் 7 வது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் ஓ’ கோனருக்கு திரு பிரதான் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்க இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கும் .
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் அமைச்சர் ஓ’கானர் பேசினார். மாணவர்களின் நடமாட்டத்தை மீட்டெடுப்பது தனது நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அவர்களின் விசா செயல்முறையை மிகவும் திறமையானதாக மாற்ற அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சமீபத்திய ஆண்டுகளில் உறவுகளை வலுப்படுத்தியுள்ளன . கல்வி மற்றும் திறன் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரித்தல், டீக்கின் பல்கலைக்கழகம் இந்தியாவுக்கு வருவது, திறன் மேம்பாட்டில் தொடர்ந்து விரிவடைந்து வரும் ஒத்துழைப்பு ஆகியவை சமீபத்தில் நிகழ்ந்துள்ளன.
திவாஹர்