ஜனநாயகம் என்பது உரையாடல், விவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தங்கர் குறிப்பிட்டார். மேலும் இடையூறு என்பது ஜனநாயகத்தின் மதிப்புகளுக்கு எதிரானது என்றும் கூறினார். “மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய ஜனநாயகத்தில், குழப்பங்கள் ஆயுதமாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தினார்.
ஜனநாயக விழுமியங்களின் சாராம்சத்தைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் அனைவரும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த அவர், ஒவ்வொரு நொடியும் நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்குவதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது என்று சுட்டிக் காட்டினார். இதற்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், “ஒரு குறிப்பிட்ட நாளில் நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படும்போது, கேள்வி நேரம் இருக்க முடியாது. கேள்வி நேரம் என்பது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கான ஒரு செயல் முறை. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நன்மை கிடைக்கும். ஜனநாயகத்தின் மாண்புகள் மற்றும் நல்லாட்சியின் அடிப்படையில் சிந்திக்கும்போது கேள்வி நேரம் இல்லாததை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.
இன்று விக்யான் பவனில் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தங்கர், கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக செயல்முறையின் இயல்பான பகுதி எனவும், ஆனால் “கருத்து வேறுபாட்டை பகைமையாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு சாபக்கேடு என்றும் கூறினார். ‘எதிர்ப்பு’ என்பது ‘பழிவாங்கல்’ ஆக மாறிவிடக் கூடாது என்று எச்சரித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என்றும் பரிந்துரைத்தார்.
‘பலவீனமான ஐந்து’ பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியா, இன்று உலகின் ‘முதல் ஐந்து’ பொருளாதாரங்களில் ஒன்றாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சியுடன், சவால்களும் உள்ளதாகக் கூறினார். “உங்கள் முன்னேற்றம் அனைவருக்கும் பிடிக்காது. உங்களின் வளர்ச்சியை களங்கப்படுத்துவதற்காக தீய சக்திகள் உள்ளன” என்று கூறினார். அத்தகைய சக்திகளை தடுக்க வேண்டுமெனவும் இளைஞர்களை அவர் வலியுறுத்தினார்.
சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு எதிரான கதைகளை உருவாக்கும் இடங்களாக மாறிவிட்டன என்று திரு.ஜெகதீப் தங்கர் கூறினார். அத்தகைய நிறுவனங்கள் நமது மாணவர்களையும், ஆசிரியர்களையும் தங்கள் குறுகிய நோக்கத்தத்திற்காகப் பயன்படுத்துவதாக எச்சரித்த அவர், இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாளும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். “இந்தியாவுக்கு எதிரான கதைகளை அழிக்க வேண்டும் என்று மாணவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட அனுமதிக்க முடியாது” என்று அவர் கூறினார்.
வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்புக் கூறலிலும் தற்போதைய அரசு கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், ஊழல், இடைத்தரகர்களுக்கு இன்று இடமில்லை என்றார். “ஊழலில் திளைத்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார். ஊழல் என்பது சமமான வளர்ச்சி மற்றும் சம வாய்ப்புகளுக்கு எதிரானது என்று கூறிய அவர், சட்டத்தை மீறுபவர்கள் தப்பிக்கும் வழிகள் அனைத்தும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன என்பதைக் எண்ணும்போது ஆறுதலாக உள்ளது என்று கூறினார்.
தேசிய கல்விக் கொள்கை -2020 அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவததோடு, கற்றலின் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாகப் பாராட்டிய அவர், இந்த கல்விக் கொள்கை பெரிய மாற்றத்திற்கு ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தொழில்முனைவோர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா