கட்டாக்கில் இன்று (ஜூலை 26, 2023) நடைபெற்ற ஒரிசா உயர் நீதிமன்றத்தின் 75-ம் ஆண்டு நிறைவுவிழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி குடியரசுத் தலைவர் தனது உரையை தொடங்கினார். பாரத அன்னையின் சேவையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களில் ஒடிசாவைச் சேர்ந்த பல வீரர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார். மேஜர் பத்மபாணி ஆச்சார்யாவின் பங்களிப்புக்காக மகா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த வீரர்களின் துணிச்சல் எப்போதும் நமது குடிமக்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஒரிசா உயர்நீதிமன்றத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்து பேசிய குடியரசுத் தலைவர், ஒரிசா உயர் நீதிமன்றம் தனது 75 ஆண்டுகால மகத்தான பயணத்தில் பல உயர் தரங்களை நிர்ணயித்துள்ளது என்றார். பாபு ஜகன்னாத் தாஸ், ரங்கநாத் மிஸ்ரா, ராதா சரண் பட்நாயக், தேபா பிரியா மொஹாபத்ரா, கோபால பல்லவ் பட்நாயக், அரிஜித் பசாயத், அனங்க குமார் பட்நாயக் மற்றும் தீபக் மிஸ்ரா போன்றவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும், அவர்களில் சிலர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளனர் என்று அவர் கூறினார். ஒரிசா உயர் நீதிமன்றம் நீதி வழங்கும் அமைப்பில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இணைக்க முயற்சித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பல நவீன, புதுமையான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்களின் மூலம் நீதி வழங்கும் முறையை நெறிப்படுத்துவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் ஒரிசா உயர் நீதிமன்றத்தை அவர் பாராட்டினார்.
இந்தியாவில் வழக்கறிஞர் தொழில் குடிமக்களின் நம்பிக்கையையும், மதிப்பையும் பெற்றுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக வலுவாக நிற்கிறது. விரைவான விசாரணை மற்றும் விரைவான நீதிக்கு சட்ட வல்லுநர்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அற்ப குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்ய முடியும் என்றார்.
திவாஹர்