“முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் நிலையான, நெகிழ்தன்மை வாய்ந்த மற்றும் சமமான எதிர்காலத்திற்கான உலகளாவிய முயற்சிகளை வழிநடத்த ஜி20 உறுப்பு நாடுகள் மகத்தான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உறுப்பு நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் முன்னோக்குகள் வேறுபட்டிருந்தாலும், ஜி20 அமைப்பு பூமி மீது கொண்டுள்ள பொதுவான அக்கறையால் ஒன்றிணைந்துள்ளதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆற்றிய முழுமையான துவக்க உரை பின்வருமாறு:
மேதகு தலைவர்களே,
• இந்திய தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் துடிப்பான சென்னை நகருக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
• சென்னை ஒரு நகரம் அல்ல, ஒரு உணர்வு. இந்தியா பெருமிதம் கொள்ளும் நகரம், இது. அதற்கு ஒரு காரணம் இல்லாமல் இல்லை. இது, திறமை, வண்ணம், படைப்பாற்றல் மற்றும் வரலாறு ஆகியவற்றின் இடமாகும். வரலாறு தவிர, சுவையான உணவு, இசை, நடனம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றை சென்னை வழங்குகிறது. நீங்கள் இப்போது இருக்கும் நகரம் கல்வி, மருத்துவம், கனரக பொறியியல், வாகனங்கள், தோல் பொருட்கள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றின் மையமாக உள்ளது.
• சென்னை, பழமையையும் புதுமையையும் இலகுவாக இணைப்பதோடு, வாழ்வு ஆற்றல் மற்றும் வாய்ப்புகளுக்கு வலிமை சேர்க்கிறது. முதல் நகர்ப்புற மாநகராட்சி இங்கு உருவானது.
• சென்னையை உள்ளடக்கிய தமிழ்நாடு மாநிலம், ஒரு பெரிய கடல் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து, சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட வளர்ச்சியில் கோலோச்சிய சோழ மன்னர்களின் நிலமாகும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள், நீரோட்டத்தை சேமிக்கவும், ஒழுங்குபடுத்தவும் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.
• மாநிலத்தின் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் வளமான கடலோர மற்றும் கடல்சார் வளங்கள், நிலையான வளர்ச்சி அணுகுமுறைக்கு சான்றாக உள்ளன.
மேதகு தலைவர்களே,
• சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், உறுதியான நடவடிக்கைகள் மூலம் நிலையான, நெகிழ்தன்மை வாய்ந்த மற்றும் சமத்துவமான எதிர்காலத்திற்கான உலகளாவிய முயற்சிகளை வழிநடத்துவதற்கான மகத்தான பொறுப்பை நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம்.
• மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் எழுச்சியூட்டும் உரைக்கும், நிலையான உலகத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கும் நன்றி கூறுகிறேன்.
மேதகு தலைவர்களே,
• நமது 20 நாடுகளின் குழு, வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த காரணத்திற்காக, நமது வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் இலக்குகள் வேறுபடலாம். இருப்பினும், இந்த பூமி மீதான நமது பொதுவான அக்கறையால் நாம் ஒன்றிணைந்துள்ளோம், மேலும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கிறோம்.
• எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவரும் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கூற்றுக்கு இணங்க அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, நிலையான மற்றும் நெகிழ்தன்மை வாய்ந்த உலகின் பொதுவான பார்வைக்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
• 2022-ஆம் ஆண்டில் இந்தோனேசிய பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில், வளங்களின் சமமான பகிர்வுடன் பணிகள், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையின் முக்கியத்துவத்தை நாம் உறுதிப்படுத்தினோம்.
• இப்போது, முக்கியத்துவம் வாய்ந்த பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதில் உலகளாவிய முயற்சிகளை எவ்வாறு வழிநடத்தலாம் என்பது குறித்த நமது ஒருங்கிணைந்த புரிதலை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
மேதகு தலைவர்களே,
• 2023-ஆம் ஆண்டில் பல புதிய மற்றும் முக்கியமான கருப்பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை விவாதங்களுக்கு நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
எம்.பிரபாகரன்