எண்ணெய் பனை உற்பத்தி பரப்பை 10 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும், 2025-26-ம் ஆண்டிற்குள் கச்சா பாமாயில் உற்பத்தியை 11.20 லட்சம் டன்னாக உயர்த்தவும், மத்திய அரசு 2021 ஆகஸ்ட் மாதத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தைத் தொடங்கியது. இந்த இயக்கத்தின் கீழ், எண்ணெய் பனை சாகுபடியை மேலும் அதிகரிக்க, மாநில அரசுகள் எண்ணெய் பனை பதப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து 2023 ஜூலை 25-ம் தேதி முதல் மாபெரும் எண்ணெய் பனங்கன்று நடவு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. பதஞ்சலி புட் பிரைவேட் லிமிடெட், கோத்ரேஜ் அக்ரோவெட் மற்றும் 3 எஃப் ஆகிய மூன்று பெரிய எண்ணெய் பனை பதப்படுத்தும் நிறுவனங்கள் எண்ணெய் பனை உற்பத்தியை அதிகரிக்க அந்தந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
2023 ஜூலை 25-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 2023 ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, கோவா, அசாம், திரிபுரா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2023 ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இத்திட்டம், 2023 ஆகஸ்ட் 8-ம் தேதி வரை சுமார் 7,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.
இதில் 6,500 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும், 750 ஹெக்டேருக்கும் மேற்பட்ட பரப்பளவு வட கிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
திவாஹர்