குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பந்தோபஸ்து மற்றும் குழந்தைகள் நலன் குறித்த நான்காவது ஒரு நாள் பிராந்திய கருத்தரங்கைப் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ராஞ்சியில் ஏற்பாடு செய்திருந்தது.

குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பந்தோபஸ்து மற்றும் குழந்தைகள் நலன் குறித்த நான்காவது ஒரு நாள் பிராந்திய கருத்தரங்கை ராஞ்சியில் உள்ள சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் உள்ள தர்பங்கா ஹாலில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்தது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் ஆகிய நான்கு மாநிலங்கள் பங்கேற்றன. கருத்தரங்கில் குழந்தைகள் நலக் குழுக்கள், இளைஞர் நீதி வாரியங்கள், கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 800-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு  குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பந்தோபஸ்து மற்றும் குழந்தைகள் நலன்  குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய தொடர்ச்சியான பிராந்திய கருத்தரங்குகளின் ஒரு அம்சமாகும்.

கருத்தரங்கில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் முஞ்சபரா மகேந்திரபாய், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சஞ்சீவ் குமார் சத்தா,  தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்  தலைவர் திரு பிரியங்க் கனூங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் நீதிச் சட்ட விதிகளில் திருத்தங்களை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கொவிட் -19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் பி.எம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் திட்டம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கல்வி, சுகாதாரம், பழங்குடியினர் நலன்,  சிறுபான்மையினர் நலன்  ஆகிய அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் சுமார் 4418 குழந்தைகள் எவ்வாறு பயனடைந்துள்ளனர் என்பதை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இணை அமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் எடுத்துரைத்தார்.

2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக்குழு காலத்தில் நடைமுறையில் உள்ள ‘குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள்’ திட்டத்தை ஒருங்கிணைத்து குழந்தைகள் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை நிறைவேற்றும்  வாத்சல்யா இயக்கத்தை அமைச்சகம் எவ்வாறு தொடங்கியுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நிறுவனம் மற்றும் நிறுவனம் சாரா பராமரிப்பில் அனைத்து குழந்தைகளின் ஆதார் பதிவை உறுதி செய்யுமாறு அமைச்சகம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை கோரியுள்ளதாக டாக்டர் முஞ்சபாரா  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு சஞ்சீவ் குமார் சத்தா வரவேற்புரையாற்றினார். குழந்தை தத்தெடுப்பிற்காக, முன்பு, நாம் நீதிமன்றங்கள் வழியாகச் செல்வோம். இப்போது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக முழு செயல்முறையும் நெறிப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதியால் தத்தெடுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார். சைல்டு ஹெல்ப்லைன் அனைத்து மாநிலங்களிலும் அவசர எண் 112 உடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும், சைல்டு ஹெல்ப்லைனின் திறனை அதிகரிப்பதையும், தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் உதவியை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர்  எடுத்துரைத்தார்.

என்.சி.பி.சி.ஆர் தலைவர் திரு பிரியங்க் கனூங்கோ கூறுகையில், முதல் முறையாக, பி.எம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் 23 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதை அறிவித்தது. முன்னதாக, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளின் கீழ், நிறுவனம் சாரா குழந்தை பராமரிப்புக்கு மாதத்திற்கு ரூ.2000 வழங்கப்பட்டது, ஆனால் இப்போது இது மாதத்திற்கு ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்திற்கு 40 குழந்தைகள் என்ற வரம்பு நீக்கப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வு வெற்றிகரமான வாத்சல்யா இயக்க முன்முயற்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக செயல்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply