வேளாண் விளைநிலங்களை அழித்து திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

வேளாண் விளைநிலங்களை அழித்து திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து
நச்சு தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அருகே திண்டுக்கல் மாவட்டத்தில்
அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த கள்ளிமந்தையம் பகுதிகளில் செழிப்பான வேளாண் நிலப்பகுதி என்பதால் இங்கு அனைத்து வகையான காய், கனிகளும் விளைவிக்கப்படுகிறது. வேளாண்மையை முதன்மையாக கொண்டு இங்கு வாழும் மக்களால் விளைவிக்கப்படுகிற காய்கறிகள், பழங்கள் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

அத்தகைய வளமிக்க கள்ளிமந்தையம், ஈசக்கம்பட்டி, வல்லக்குண்டாபுரம், தேவத்தூர், ஒத்தையூர், மற்றும் சிக்கமநாயக்கம்பட்டி கிராமங்களை சுற்றியுள்ள ஏறத்தாழ 700 ஏக்கர் விளை நிலங்களையும், பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலங்களையும் வலுக்கட்டாயமாக அபகரித்து தொழிற்பூங்கா அமைக்க கடந்த சூலை 11 அன்று திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும். வேளாண்மையை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளிடம் எவ்வித கருத்துக் கேட்பும் நடத்தாமல் அரசாணை வெளியிட்டதோடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என பச்சை பொய்களைப் பரப்பி, மக்களை அச்சுறுத்தி நிலங்களைப் பறித்து பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.

திமுக அரசின் திட்டப்படி இப்பகுதியில் நாசகார நச்சு ஆலைகளை அமைக்க அனுமதித்தால் சற்றேறக்குறைய 50 கி.மீ சுற்றளவுக்கு நிலம், நீர் மற்றும் காற்று மாசுபடுவதோடு, பன்னெடுங்காலமாக நிலைத்து வாழ்கிற பூர்வகுடி மக்கள் தங்கள் வாழ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவலநிலையும் ஏற்படும். மேலும் கொத்தையம் அணைக்கு அருகில் நச்சு தொழிற்சாலைகள் அமைவதால், அணையின் நீர் வடிகால் மற்றும் பாசன பகுதிகளான பொருளூர் கரிசல் குளம், பருத்தியூர் குளம், சாலக்கடை, நல்லதங்காள் அணை வழியாக அமராவதி ஆறு வரை செல்லும் நீரோடை முழுவதும் ரசாயன கழிவுகள் நிறைந்த கால்வாயாகவும் மாறிவிடும்.

இதனால் ஏறத்தாழ 10000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலம், நீர், காற்று அனைத்தும் நஞ்சாக மாறிவிடும். அதிகாரத் திமிரிலும், பசப்பு வார்த்தைகளிலும் மக்களை ஏமாற்றி சொந்த நிலத்திலேயே அதிகாரமற்ற அடிமைகளாக, ஏதிலிகளாக மாற்ற முயலும் திமுக அரசின் திட்டமிட்ட சதிச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

விளை நிலங்கள் எல்லாம் விலைநிலங்களாகி வேளாண் பரப்பளவு குறைந்துகொண்டே போகும் தற்கால கொடுஞ்சூழலில், அரச அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் மக்களை அடக்கி – ஒடுக்கி வானூர்தி நிலையம், எட்டு வழிச்சாலை, நிலக்கரி சுரங்கம், தொழிற்பேட்டை அமைப்பது என ஆளும் அரசுகளும் தன் பங்கிற்கு விளைநிலங்களை அழிப்பது இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படவே வழிவகுக்கும். ஏற்கனவே அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், விளை நிலங்களைப் பறித்து அரசே நச்சுத் தொழிற்சாலைகள் அமைப்பது மக்களை வாழவே முடியாத வறுமை நிலைக்கு தள்ளிவிடும்.

ஆகவே, வேளாண் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியில் புதிய நச்சு தொழிற்சாலைகள் அமைக்கும் முடிவினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்றும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தக் கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இதையும் மீறி வேளாண் நிலங்களை அபகரிக்க திமுக அரசு முயன்றால், போராடும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகத் துணை நின்று இக்கொடுந்திட்டத்தை
நாம் தமிழர் கட்சி போராடி தடுத்து நிறுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கே.பி.சுகுமார்

Leave a Reply