“டிப்பர் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். வாகன விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு கல்லூரி மாணவர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது

தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்பட்டுக்கொண்டு வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

டிப்பர் லாரிகள் மணல், ஜல்லி ஏற்றிக்கொண்டு அதிக வேகத்தில் வருவதே பெரும்பாலும் விபத்துக்கு வழி வகுக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகம் டிப்பர் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்தி அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு குறைந்த பட்ச தண்டனை அளிக்கப்படுவதே வாகன ஓட்டுனர்களின் அஜாக்கிரதைக்கும், அலட்சிய போக்கிற்கும் வழிவகுக்கிறது.

ஆகவே வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும். அப்பொழுது தான் விபத்துக்கள் குறையும். வாகன ஓட்டுனர்களுக்கும், மக்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொத்தேரியில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அளித்துள்ள நிவாரணம் போதுமானது இல்லை. எதிர்கால கனவுகளோடு கல்லூரிக்கு சென்ற மாணவர்களின் இழப்பு என்பது பேரிழப்பாகும். அவர்களின் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விபத்தில் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சையும், பாதிப்பிற்கு ஏற்ப உரிய நிவாரணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply