இந்திய தபால் சேவையின் (2021 மற்றும் 2022 பிரிவு) பயிற்சி அதிகாரிகள் இன்று (11.08.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
அவர்களிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், அஞ்சல் துறை தமது 160 ஆண்டுகால பயணத்தின் மூலம் நமது தேசத்திற்கு சேவையாற்றுவதில் கலங்கரை விளக்கமாக திகழ்வதாகக் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 1,60,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட இந்திய அஞ்சல் துறையின் விரிவான கட்டமைப்பு, உலகின் மிகப்பெரிய அஞ்சல் அமைப்பாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்திய அஞ்சல் துறை கட்டமைப்பு, நாட்டின் பரந்த கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் ஒரு ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அனைவருக்கும் நிதிச் சேவைகள் கிடைக்கச் செய்வதில் அஞ்சல் துறையின் பங்கை குடியரசுத் தலைவர் பாராட்டினார். நிதி இடைவெளியைக் குறைப்பதற்கும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அஞ்சல் துறை சிறந்த உத்திகளை என்று அவர் தெரிவித்தார். அரசின் மானியங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வூதியங்களை மக்களுக்கு வழங்குவதில் அஞ்சல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தபால் நிலையங்கள் மூலம் தடையற்ற நிதிச் சேவைகள் கிடைப்பதால் இடைத்தரகர்கள் தொடர்பான சிக்கல்கள் குறைந்து உரிய பயனாளிகளுக்கு நிதிச் சேவைகள் சென்றடைவதாக அவர் கூறினார்.
இந்திய தபால் சேவை அதிகாரிகளின் பங்கு நாட்டு மக்களுக்கான சேவையில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை அணுகுமுறை தேவை என்று கூறிய குடியரசுத் தலைவர், உடனடித் தகவல் தொடர்புகள் வந்துவிட்ட இந்த காலகட்டத்தில், அஞ்சல் துறையும் அதற்கேற்ப பரிணாம வளர்ச்சி பெற வேண்டும் என்று அவர் கூறினார். டிஜிட்டல் காலகட்டத்திற்கு ஏற்ப அஞ்சல் துறை தமது சேவைகளை தீவிரமாக நவீனப்படுத்தி வருவதாகவும் இது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். மாற்றங்கள் நிறைந்த இந்த அஞ்சல் துறைப் பயணத்தில் இளம் அதிகாரிகளின் புதுமையான யோசனைகள் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
திவாஹர்