ஆகஸ்ட் 16-17 நள்ளிரவு மும்பைக்கு அருகிலுள்ள அரபிக் கடலில் சுமார் 200 கி.மீ தூரத்தில் பனாமா கொடி கொண்ட ஆராய்ச்சி கப்பலான எம்.வி.டாங் ஃபாங் கான் டான் நம்பர் 2 இல் இருந்த சீன நாட்டவரை இந்திய கடலோர காவல்படை வெற்றிகரமாக வெளியேற்றியது. சவாலான வானிலை மற்றும் இருண்ட இரவுக்கு மத்தியில் இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சி கப்பலில் இருந்த யின் வெய்க்யாங் என்ற ஊழியர் குழுவில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது. சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று கொண்டிருந்த கப்பலுடன் உடனடியாக தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, தேவையான தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
விரைவான வெளியேற்றம் மற்றும் அடுத்தடுத்த மருத்துவ மேலாண்மைக்கான சிறந்த சாத்தியமான விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, நோயாளி கடலோர காவல் படையின் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (சி.ஜி ஏ.எல்.ஹெச்) எம்கே -3 மூலம் அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் மேல் மருத்துவ சிகிச்சைக்காக கப்பலின் முகவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இருண்ட நேரங்களில் சி.ஜி ஏ.எல்.ஹெச் மற்றும் சி.ஜி.ஏ.எஸ் டாமன் மேற்கொண்ட விரைவான நடவடிக்கை, கடலில் ஒரு வெளிநாட்டு பிரஜையின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற உதவியது. இது “நாங்கள் பாதுகாக்கிறோம்” என்ற குறிக்கோளுக்கான இந்திய கடலோரக் காவல்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
எஸ்.சதிஸ் சர்மா