குஜராத்தின் கெவாடியாவில் ஆகஸ்ட் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கடல்சார் மாநில மேம்பாட்டு குழுமத்தின் 19-வது கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தலைமை தாங்குகிறார். இதில் கடல்சார் துறையின் ஒட்டுமொத்த முன்னேற்றம் தொடர்பான முக்கியமான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், கடலோர மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் அங்கு கலந்து கொள்வார்கள்.
கடல்சார் மாநில மேம்பாட்டு குழுமம் 1997 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கடல்சார் துறையின் மேம்பாட்டிற்கான ஒரு உயர் ஆலோசனை அமைப்பாகும். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கடல்சார் மாநிலங்களின் துறைமுகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்கள், கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கடல்சார் மாநில மேம்பாட்டு குழுமம் அமைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பல்வேறு வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் குறித்து குழுமம் விவாதிக்கும்.
திவாஹர்