மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் , இந்தியாவின் கடல்சார் துறைக்கான தொலைநோக்கு பார்வையை வெளியிட்டார், குஜராத்தின் கெவாடியாவில் இன்று நடைபெற்ற 19 வது கடல்சார் மாநிலங்களின் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் உருமாற்ற தாக்கத்துக்கு உறுதியளிக்கும் முக்கிய முன்முயற்சிகளை விளக்கினார்.
நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக துறைமுக பாதுகாப்பு பணியகத்தை அரசாங்கம் விரைவில் ஒன்றிணைக்கும் என்று திரு சோனோவால் கூறினார். நிலையான வளர்ச்சியில் அரசின் கவனத்தை எடுத்துரைத்த அவர், மத்திய அரசு மற்றும் மாநில அரசு துறைமுகங்களில் ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குவதற்கான அமைச்சகத்தின் லட்சியத் திட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு துறைமுகங்களும் ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் என்று அவர் கூறினார். இதற்காக ரூ.1.68 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தீனதயாள் துறைமுக ஆணையம் ஏற்கனவே இறுதி செய்துள்ளது என்றார் அவர்.
துறைமுகங்களுக்கான அமிர்த கால தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் திறனை நான்கு மடங்காக உயர்த்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை திரு சோனோவால் அறிவித்தார். அனைத்து முக்கிய துறைமுகங்களும் 2047 ஆம் ஆண்டிற்கான துறைமுக பெருந்திட்டத்தை தயாரித்துள்ளன என்றும், மாநிலங்கள் 2047 ஆம் ஆண்டிற்கான துறைமுக பெருந்திட்டங்களை தயார் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் மொத்த துறைமுக திறன் தற்போதுள்ள 2,600 மெட்ரிக் டன்னில் இருந்து 2047 ஆம் ஆண்டில் 10,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா