நேற்றிரவு, 8:30 மணிக்கு, பெங்களூர், பிரிகேட் ரோடு அருகிலுள்ள சர்ச் தெருவின் நடைபாதையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சென்னையை சேர்ந்த பாலன் குமார் என்பவரின் மனைவி பவானி, (வயது 38) என்ற பெண், பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும், காயமடைந்த இருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடித்த பகுதியில், ரெஸ்டாரெண்டு, பார், ‘பப்’கள் அதிகமாக உள்ளன. தினமும், நள்ளிரவு முதல், அதிகாலை, 3:00 மணி வரை, இப்பகுதி பரபரப்பாக காணப்படும். நேற்று, ஞாயிற்றுகிழமை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. குண்டு வெடித்தவுடன், ரெஸ்டாரெண்ட், ‘பப்’களில் இருந்தவர்கள், பதட்டத்துடன் வெளியேறினர்.
அப்பகுதி முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பெங்களூரு முழுவதும் பீதி ஏற்பட்டது.’ வெடித்த குண்டு, ‘இம்புருவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டிவைஸ்’ ரகத்தை சேர்ந்த, குறைந்த சக்தி வாய்ந்த குண்டு’ என்று, பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார், அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். ‘கோப்ரா போர்ஸ்’ என்ற சிறப்பு படையினர், பெங்களூரு நகர் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவின் முக்கிய பகுதியில் குண்டு வெடித்திருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும், கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜார்ஜூம் அவசர ஆலோசனை நடத்தினர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை செய்ய, மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-சி.மகேந்திரன்.