கோவா ஆளுநர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 23, 2023) நடைபெற்ற கோவா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இன்றைய உலகில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று கூறினார். கோவா பல்கலைக்கழகம் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். நமது உயர்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற துறைகளில் உலகத் தரம் வாய்ந்த திறனை வளர்ப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். கோவா பல்கலைக்கழகம் கோவா அரசின் உயர்கல்வி இயக்குநரகத்துடன் இணைந்து ‘முழுமையான கற்பித்தல் மற்றும் மெய்நிகர் சார்பு டிஜிட்டல் ஒருங்கிணைந்த அமைப்பு’ என்ற திட்டத்தை நடத்தி வருவது மகிழ்ச்சி என்று கூறினார்.
கோவா பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பல்துறை ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க கோவா பல்கலைக்கழகத்தின் இந்த முன்முயற்சியை பாராட்டினார். கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான திறன் மேம்பாட்டு மையமாக திகழும் திறன் இப்பல்கலைக்கழகத்திற்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உன்னத பாரத இயக்கத்தின் கீழ் கோவா பல்கலைக்கழகம் ஐந்து கிராமங்களை தத்தெடுத்துள்ளதும், அங்கு நிலைத்தன்மை மாதிரியைப் பின்பற்றி சிப்பிகள் மற்றும் காளான்கள் பயிரிடப்படுகின்றன என்பதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குடியரசுத் தலைவர் கூறினார். மாணவர்களிடையே சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை குறித்த மனப்பாண்மையை வளர்ப்பதற்காக கோவா பல்கலைக்கழகத்தின் குழுவை அவர் பாராட்டினார்.
திவாஹர்