போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றொரு நடவடிக்கையில், நைரோபியில் இருந்து நேற்று வந்த கென்யா பயணியை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தது.
அப்பயணியை விசாரித்தபோது, எந்த தடை செய்யப்பட்ட பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்று மறுத்தார். எனினும், வருவாய்ப் புலனாய்வு இயக்குநகரக அதிகாரிகளால் சந்தேக நபரின் உடமைகளை பரிசோதித்ததில், சர்வதேச சந்தையில் சுமார் ரூ .17 கோடி மதிப்புள்ள சுமார் 1,698 கிராம் கோகைன் மீட்கப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு மும்பை புறப்படவிருந்த விமானத்திற்கான விமான டிக்கெட்டை அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதன் மூலம் தடைசெய்யப்பட்ட பொருட்களை மும்பையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ச்சியான விசாரணை மற்றும் கண்காணிப்பைத் தொடர்ந்து, வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளின் துல்லியமான திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் விளைவாக தடைசெய்யப்பட்ட போதைப்பொருளைப் பெறுபவர் பிடிபட்டார். கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மும்பை வசாய் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் உளவியல் பொருட்கள் சட்டத்தின் விதிகளின்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
2023 ஜனவரி முதல் ஜூலை வரை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நாடுமுழுவதும் 42 கோகைன் மற்றும் ஹெராயின் பறிமுதல் செய்துள்ளது. 2023 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 31 கிலோவுக்கும் அதிகமான கோகைன் மற்றும் 96 கிலோ ஹெராயின் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்