“காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணியை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் சுகாதாரண முறையில் மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை இயக்குபவர்களுக்கு குறைந்த அளவிலேயே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை இயக்கும் பலர் நிரந்தர வேலையில்லாமல், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாத ஊதியத்துடன் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தற்கால ஊழியர்களாகவே 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்களுக்கு இதுநாள் வரை சம்பள உயர்வோ, உரிய சலுகைகளோ கிடைக்கவில்லை. அவர்களின் ஊதியத்தை முறைப்படுத்தியும், வேலையை நிரந்தரமாகவும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் ஒரு கிராம செயலாளர் முழுநேர பணியாளராக இருக்கிறார்கள். இவர்கள் ஊராட்சிகளில் வரி வசூல், குடிநீர், சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விவரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் என்று பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

இப்படி முக்கிய பணிகளை மேற்கொள்ளும் ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு ஊராட்சியில் இடம் காலியாக உள்ளது. அதனால் ஒரு செயலாளர், இரண்டு மற்றும் மூன்று ஊராட்சிகளை பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் ஊராட்சியின் வளர்ச்சி பணியும், மக்கள் பணியும் பெரும் தொய்வு ஏற்பட்டு பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஆகவே காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இயக்குபவர்களின் பணியை நிரந்தரம் செய்தும், அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தியும் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply