வடகிழக்கு மாநிலங்களின் முன்னணி அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவத் துறைகள் அமைக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுஷ் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மற்றும் அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் நேற்று (25.08.2023) குவஹாத்தியில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களும், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அந்தப் பகுதியின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் திரு மகேந்திரபாய் முஞ்சபாரா, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் பிற மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஆயுஷ் மருத்துவத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக இதில் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்,  நமது அழகான இமயமலைப் பகுதியில் பாரம்பரிய மருத்துவ முறையின் முக்கியத்துவம் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்துவதற்காக பாரம்பரிய மருத்துவ முறையின் நன்மைகளைப் பயன்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், 19 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இது தொடர்பான துறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  அதே போல வடகிழக்கு மாநிலங்களின் முன்னணி அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ஆயுஷ் துறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் திரு சர்பானந்த சோனோவால் கேட்டுக் கொண்டார்.

திவாஹர்

Leave a Reply