ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்!  

ye2912P2

ye2912P1

ஏற்காட்டில் இருந்து குப்பனுர் வழியாக சேலம் செல்லும் மலைப்பாதையில், வழுக்கு பாறை எனும் இடத்திற்கு அருகில், துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி வனவர் கந்தசாமிக்கு தகவல் வந்தததையடுத்து, கந்தசாமி அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்க்கும் போது, அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து கந்தசாமி ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஊரக டி.எஸ்.பி. சந்திரசேகரன் மற்றும் ஏற்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மலைப்பாதைக்கு அருகில் உள்ள வன பகுதியில் கிடந்த பிரேதத்தை கைப்பற்றி சாலைக்கு கொண்டு வந்தனர்.

தடய அறிவியல் நிபுணர் கொழுந்தியப்பன், பிரேதத்தின் மார்பில் இரு துளைகள் இருப்பதாகவும், தலையின் பின்புறம் அடிப்பட்டிருப்பதாகவும் கூறினார். அது மட்டுமின்றி இவர் இறந்து 5 நாட்களுக்கு மேலிருக்கும் என்றார்.

இறந்த ஆள் அணிந்திருந்த டீ சர்ட் மற்றும் சால்வை ஒன்று அவரது தலையில் முக்காடு போல் மாட்டி இருந்ததாலும், அந்த இடத்திற்கு யாரும் வாகனமின்றி வரமுடியாது என்பதாலும், பிணத்தின் எந்த பாக்கெட்டுகளிலும் அடையாள அட்டை உள்ளிட்ட எந்தவித பொருட்களும் கிடைக்காததால், கொலை செய்யப்பட்டு வன பகுதியில் வீசப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பின்னர் பிணம் பிரேதப் பரிசோதனைக்ககாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இதே பகுதியில் கள்ள காதலியை, அவரது கள்ள காதலன் ஒருவன் கொலை செய்து வீசியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்குள்ளாகவே மேலும் ஒரு பிணம் அதே பகுதியில் கிடப்பது அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த சாலையில் சோதனை சாவடி அமைத்து, காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

   -நவீன் குமார்.