சந்திரயான்-3 வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே பிரதமர் நரேந்திர மோதி உரை .

பிரதமர் திரு. நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை கண்காணிப்பு மற்றும் கட்டளைக் கட்டமைப்பான இஸ்ட்ராக்-கைப் (ISRO Telemetry Tracking and Command Network – ISTRAC)  பார்வையிட்டு, சந்திரயான் -3-ன் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே உரையாற்றினார். சந்திரயான் -3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு சந்திரயான் -3 திட்டத்தின் புதிய தகவல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் அண்ட் கமாண்ட் நெட்வொர்க்கில் (இஸ்ட்ராக்) விஞ்ஞானிகள்  மத்தியில் உரையாற்றிய பிரதமர், உடலும் மனமும் மகிழ்ச்சியால் நிரம்பும் இதுபோன்ற சந்தர்ப்பம் அமைவது மிகவும் அரிதானது என்று கூறினார். பொறுமையின்மை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உண்டு என்று குறிப்பிட்ட பிரதமர், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தின் போது அதே உணர்ச்சிகளைத் தாமும் அனுபவித்ததாகக் குறிப்பிட்டார்.  தமது மனம் எல்லா நேரங்களிலும் சந்திரயான்-3 திட்டத்திலேயே கவனம் செலுத்தியதாகக் கூறினார். இஸ்ட்ராக் மையத்தைப் பார்வையிடும் தமது திடீர் திட்டங்களால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்துக் கூறிய பிரதமர், விஞ்ஞானிகளின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தைரியம், பக்தி மற்றும் ஆர்வத்திற்காக அவர்களைப் பார்த்து மரியாதை செலுத்த ஆர்வமாக இருந்தாகக் கூறினார்.

இது சாதாரண வெற்றி அல்ல என்றும் பிரதமர் கூறினார். இந்த சாதனை எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் சக்தியை பறைசாற்றுகிறது என்று அவர் கூறினார். இந்தியா சந்திரனிலும் உள்ளது என்றும் நமது தேசியப் பெருமை சந்திரனில் பதிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத இந்த சாதனையை எடுத்துரைத்த பிரதமர், இது அச்சமற்ற மற்றும் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ளும் இன்றைய இந்தியா என்று குறிப்பிட்டார். புதிதாக சிந்தித்து, புதுமையான வழியில், இருண்ட பகுதிக்குச் சென்று உலகில் ஒளியைப் பரப்பும் இந்தியா இது என்று அவர் தெரிவித்தார். இந்த இந்தியா 21 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் என அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply