மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, ராஜஸ்தானின் கங்காபூர் நகரில் இன்று (26.08.2023) நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, கூட்டுறவு உர நிறுவனமான இப்கோ நிறுவனத் தலைவர் திரு திலீப் சங்கானி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடி விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி கூட்டுறவுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறினார். திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டில் முன்னெப்போதும் இல்லாத பணிகளைச் செய்து வருவதாக அவர் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டின் விண்வெளி பயணத்திற்கு புதிய வேகத்தையும் ஆற்றலையும் வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக இந்தியா நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக மாறியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் முறையில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ. 6000 நிதியை அரசு வழங்குவதை அவர் குறிப்பிட்டார். இதுதவிர, விவசாயக் கடன், பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் என்று அவர் தெரிவித்தார்.
திவாஹர்