எகிப்தின் கெய்ரோ (மேற்கு) விமானப்படை தளத்தில் 2023 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 16 வரை நடைபெற உள்ள பிரைட் ஸ்டார் -23 என்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பலதரப்பு முப்படைகளின் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) குழு இன்று புறப்பட்டது.
அமெரிக்கா, சவுதி அரேபியா, கிரீஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவுகள் பங்கேற்கும் பிரைட் ஸ்டார் -23 பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இந்திய விமானப்படையில் ஐந்து மிக்-29, இரண்டு ஐ.எல்-78, இரண்டு சி-130 மற்றும் இரண்டு சி-17 ரக விமானங்கள் இடம்பெறும். இந்திய விமானப்படையின் கருட் சிறப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும், எண் 28, 77, 78 மற்றும் 81 படை பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்திய விமானப்படை விமானம், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 150 வீரர்களையும் ஏற்றிச்செல்லும்.
கூட்டு நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை பயிற்சி செய்வதே இப்பயிற்சியின் நோக்கமாகும். எல்லைகளுக்கு அப்பால் பிணைப்பை உருவாக்குவதற்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், இத்தகைய தொடர்புகள் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையில் உத்தி சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வழங்குகின்றன.
இந்தியாவும் எகிப்தும் சிறப்பான உறவையும் ஆழமான ஒத்துழைப்பையும் கொண்டுள்ளன. இதில் இரு நாடுகளும் இணைந்து 1960 களில் ஏரோ-என்ஜின் மற்றும் விமானங்களை உருவாக்கின மற்றும் எகிப்திய விமானிகளுக்கு பயிற்சி இந்திய வீரர்களால் வழங்கப்பட்டது. இரு நாடுகளின் விமானப் படைத் தளபதிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் எகிப்துக்கு அண்மையில் மேற்கொண்ட பயணங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்தது. இரு நாடுகளும் தங்கள் ஆயுதப் படைகளுக்கு இடையிலான வழக்கமான பயிற்சிகளுடன் கூட்டுப் பயிற்சியையும் மேம்படுத்தியுள்ளன.
திவாஹர்