எதையெல்லாம் வரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுவே சில நேரங்களில் சாபமாகி விடுவது உண்டு. பாட்டாளி சொந்தங்களாகிய உங்களின் சமூக ஊடகப் பயன்பாடும் அப்படிப்பட்டதாகவே மாறியிருக்கிறது. அது குறித்து எச்சரிக்கவும், நல்வழிப்படுத்தவும் தான் இந்த மடலை வரைகிறேன்.
ஒரு கட்சி என்றால், அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்நிலைப் பொறுப்பாளர்கள் வரை அனைவரும் கடமை உணர்ச்சியுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். எந்தவொரு இயக்கமும் சீராகவும், செம்மையாக செயல்படுவதற்கு இந்த குணங்கள் அடிப்படையானவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ என்று அறிவுறுத்தியது அவரால் தொடங்கப்பட்ட கட்சியின் தொண்டர்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவரது அறிவுரை பொருந்தும். கட்சிகள், அமைப்புகளைக் கடந்து தனி மனிதர்களும் கூட அந்த தத்துவத்தைக் கடைபிடித்தால் தான் பணியில் சிறக்க முடியும்; வாழ்க்கையில் உயர முடியும்.
அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் இந்த அறிவுரையை பின்பற்றவில்லை என்றால், தேவையில்லாமல் குழுக்களும், குழு மோதல்களும் ஏற்படும். அது எந்தவொரு கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதாக இருந்தால் அதை நளினமாகவும், நாகரிகமாகவும் முன்வைக்க வேண்டும். இவற்றையெல்லாம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சங்கம் தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அரசியல் பயிலரங்கத்தை நடத்தி, அதன் வழியாக நெறிமுறைகளை கற்பித்து, பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக பயிலரங்கில் கற்பிக்கப்பட்ட நெறிமுறைகளை கடைபிடிக்கத் தவறியவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியில் தொடர்ந்து பயணிப்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.
ஓர் அரசியல் கட்சியில் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடே ஏற்படாதா? என்று கேட்டால், அப்படியெல்லாம் எந்த உறுதியும் அளிக்க முடியாது என்பது தான் நேர்மையான விடையாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால், பாட்டாளிகளான நாமெல்லாம் சொந்தங்கள் என்பதால் நமக்கு இடையிலான சிக்கல்களை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் எளிதானது தான்; முயன்றால் அது அனைவருக்கும் சாத்தியமாகக் கூடிய ஒன்று தான்.
கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் கொள்கைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அது தான் நமது இலக்கை நாம் வெற்றிகரமாக எட்டுவதற்கு உதவும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்லர்.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது இராணுவத்துக்கு இணையான ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்ட கட்சி என்பதை மாற்றுக்கட்சியினரும் அறிவார்கள். பா.ம.க.வில் குழுக்களோ, குழு மோதல்களோ இருந்தது கிடையாது. ஆனால், இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக அவை எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளன. அவை புற்றுநோயை விட மோசமானவை. அவற்றை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழு மோதல் எனும் புற்றுநோய் உடனே ஒழிக்கப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களை கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மிகவும் வலிமையானவை என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதே நேரத்தில் சமூக ஊடகங்கள் எனப்படும் கூர்மையான கத்தியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியம். கூர்மையான கத்தி மருத்துவர்களின் கைகளில் இருந்தால் அது பல உயிர்களைக் காத்து ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படும். அதே கூர்மையான கத்தி கொலையாளிகளின் கைகளில் இருந்தால் பல உயிர்களை பறிக்கும் அழிவுசக்தியாக பயன்படுத்தப்படும். கூர்மையான கத்திக்கு இணையான வலிமை கொண்ட சமூக ஊடகங்களை நாம், மருத்துவர்களின் கைகளில் இருக்கும் கத்திக்கு இணையாக ஆக்கப்பூர்வ நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; ஒருபோதும் எதிர்மறையாக பயன்படுத்தக் கூடாது.
சமூக ஊடகங்களில் நம்மைப் பிடிக்காதவர்கள் நம்மைப் பற்றி தவறாகவும், தரக்குறைவாகவும் பதிவிடலாம். தனிப்பட்ட முறையில் கூட நம்மில் சிலருக்கு எதிராக எவரேனும் பதிவிடக் கூடும். அத்தகைய தருணத்தில், மிகவும் நாகரிகமான முறையில் நமக்கு எதிர்த்தரப்பினரை தொடர்பு கொண்டு உண்மை நிலையை விளக்கி, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கச் செய்ய வேண்டும். அதை விடுத்து பதிலுக்கு பதில் என்பது போன்ற நாகரிகமற்ற செயல்களில் பாட்டாளி சொந்தங்கள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
அதேபோல், பாட்டாளி சொந்தங்கள் தங்களின் மனக்குறைகளை கட்சியின் அமைப்பு சார்ந்த கூட்டங்களில் பேசி தீர்வு காண வேண்டுமே தவிர, அவற்றை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தக்கூடாது. சமூக ஊடகங்களை கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் நாம் நமது இலக்கை அடைவதற்கான முயற்சிகளுக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா