“புதுமையான நீர்நிலை மேலாண்மைத் திட்டம் “தமரா”வை ரூ.89.00 லட்சம் நிதி உதவியுடன் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியமும் (டி.டி.பி), அறிவியல் தொழில்நுட்பத் துறையும் (டி.எஸ்.டி) ஆதரிக்கிறது.

குறைந்து வரும் நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதில் உள்ள சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ள நிலையில், மத்திய அரசின் முயற்சிகள் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மதிப்புமிக்க நீர்நிலைகளைப் பாதுகாத்தல், சுழற்சி நீர் சிக்கனத்தை ஊக்குவித்தல் ஆகிய குறிப்பிட்ட குறிக்கோளைக் கொண்ட அம்ருத் 2.0 இயக்கம் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளில் ஒன்றாகும். நீர் நிலைகளுக்குப் புத்துயிரூட்டுதல்,  நீர்க்  கழிவுகளைக் குறைத்தல், நகர்ப்புற திட்டமிடல் உத்திகளை மேம்படுத்துதல் ஆகிய இருவகை நோக்கங்களுக்கு இந்த இயக்கம் உதவுகிறது. இது நீலப் பொருளாதாரம் என்ற கருத்தாக்கத்துடன் முற்றிலும் பொருந்துகிறது, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நல்வாழ்வைப் பராமரிக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சிக்குக் கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டை வலியுறுத்துகிறது.

பொறுப்பான நீர்நிலை மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (டி.டி.பி) ஒடிசாவின் பாரிஃப்லோ லேப்ஸ் என்ற   “நுண்ணறிவு நீர்நிலை மேலாண்மை அமைப்பின் (ஐ.டபிள்யூ.எம்.எஸ்)-தமாரா வளர்ச்சி மற்றும் வணிகமயமாக்கல்”  திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது. இத்திட்டத்தின் மொத்தத் திட்ட மதிப்பான ரூ.150.00 லட்சத்தில் ரூ.89.00 லட்சத்தை வழங்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கண்டுபிடிப்பு மையத்தில் நீரின் தரத்தை நிர்வகிக்க தொலையுணரிகள் மற்றும் இணையக் கருவிகள் அடிப்படையிலான தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட நவீன காற்றோட்ட அமைப்பு உள்ளது. இந்த நவீன அணுகுமுறை நீர் மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் தற்போதைய முறைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு குளங்கள் அனைத்தும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply