இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்ட இயக்கமான ஆதித்யா-எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பாராட்டியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தப் பணி சூரிய குடும்பம் குறித்த நமது புரிதலை பெரிதும் ஆழப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பாரதத்தின் முதல் சூரிய ஆய்வு இயக்கமான, ஆதித்யா-எல் 1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது நமது விண்வெளி பயணத்தில் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாக அமைந்துள்ளது!
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ( @isro ) உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நான் பாராட்டுகிறேன். இந்த முக்கியமான சாதனை, நிச்சயமாக சூரிய குடும்பத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும்.”
இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்