அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைவதற்கான பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் திறனை ‘குஜராத் பிரகடனம்’ மீண்டும் உறுதிப்படுத்துகிறது
உலக சுகாதார அமைப்பு-ஜி.சி.டி.எம்-ஐ நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியா, உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உச்சிமாநாட்டின் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் உலக சுகாதார அமைப்பின் திறன்களை அதிகரிக்கும்.
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உச்சி மாநாடு 2023 இன் முடிவு ஆவணத்தை “குஜராத் பிரகடனம்” என்ற வடிவில் உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) வெளியிட்டுள்ளது. இந்த பிரகடனம் உள்நாட்டு அறிவு, பல்லுயிர் மற்றும் பாரம்பரிய, துணை மருத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான உலகளாவிய கடமைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான முழுமையான, சூழல் சார்ந்த, சிக்கலான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகு முறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும், மதிப்பிடுவதற்கும், பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதற்கும் அதிதீவிர விஞ்ஞான முறைகளின் பயன்பாடு தேவை என்பதை உலக சுகாதார அமைப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நடத்தும் நாடாக, உச்சிமாநாட்டின் செயல்திட்டம் மற்றும் பிற தொடர்புடைய முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் உறுப்பு நாடுகள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஆதரவளிக்கும் உலக சுகாதார அமைப்பின் திறன்களை அதிகரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது.
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இரண்டு நாள் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ உலகளாவிய உச்சி மாநாடு 2023 இன் செயல் திட்ட முன்மொழிவுகள் உச்சிமாநாட்டில் வழங்கப்பட்ட சான்றுகள், விவாதங்கள் மற்றும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டவை. மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, புவி மண்டலம், ஆராய்ச்சி மற்றும் சான்றுகள், உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் சுகாதார அமைப்புகள், தரவு மற்றும் வழக்கமான தகவல் அமைப்புகள், டிஜிட்டல் சுகாதார எல்லைகள், பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை, மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் நெறிமுறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசுகையில், “பாரம்பரிய மருத்துவ முறை குறித்த நமது பண்டைய அறிவை மேம்படுத்துவதற்கான நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு குஜராத் பிரகடனம் ஒரு சான்றாகும். கூட்டு முயற்சிகள் மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்,” என்றார்.
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உச்சி மாநாட்டின் போது உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “குஜராத் பிரகடனம்” பாரம்பரிய மருத்துவத்தின் திறனை அறிவியலின் கண்ணோட்டத்தில் பயன்படுத்த ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், தேசிய சுகாதார அமைப்புகளில் பாரம்பரிய மருந்துகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தும் என்றும் பாரம்பரிய மருத்துவத்தின் சக்தியைத் திறக்க உதவும் என்றும் கூறியிருந்தார்.
எஸ்.சதிஸ் சர்மா