சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் உலக அமைதி ஆகிய கொள்கைகளை போதிக்கும் இந்திய அறிவுப் பாரம்பரியம் உலகின் பழமையான ஒன்றாகும். செப்டம்பர் 05, 2023 அன்று மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தில்லி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இந்திய அறிவு பாரம்பரியம் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள சிறந்த வாழ்க்கை விழுமியங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் உள்பட உலகம் எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு வேதங்களில் தீர்வுகள் உள்ளன என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். இயற்கை வழிபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு வளர்ப்பு போன்ற நடைமுறைகளை வேதங்கள் வலியுறுத்துகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். “வேதங்களின் மிக முக்கியமான அம்சம் அதன் ஆயுட்காலம், அதாவது, அது சனாதனம், இருப்பினும், ஒரு பிரிவினர் வேதங்களையும் அதன் விழுமியங்களையும் தாக்குகிறார்கள். இதுபோன்ற முயற்சிகள் பயனற்றவை என்பதை நிரூபிக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.
ஜனநாயகம் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளால் உலகிற்கு வழங்கப்பட்ட ஆட்சி முறையாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர், ‘சபா’ மற்றும் ‘சமிதி’ போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகள் இருந்த வேத காலத்தில் ஜனநாயக மதிப்புகளின் வேர்கள் காணப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
வேதகாலம் பெண்களுக்கு அதிகாரமளித்த காலமாகும், ஏனெனில் ஆண்களுக்கு சமமான உரிமைகளை பெண்களும் அனுபவித்தனர் என்று திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார். வேத காலத்தைச் சேர்ந்த இத்தகைய பெண்கள் இந்திய அறிவு மரபில் பங்களித்த பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இந்தியக் கலாச்சாரத்தின் வலிமையை விளக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சர், “வரலாறு முழுவதும், பல தாக்குதல்கள் இருந்தபோதிலும், நமது கலாச்சாரம் பெருமையுடன் செழித்து வளர்ந்துள்ளது. காரணம் வேத விழுமியங்கள் மற்றும் அதை அடிப்படையாகக் கொண்ட பண்டைய அறிவு மரபு” என்றார்.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் மக்களின் சமூக விழிப்புணர்வில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பங்களிப்பு குறித்தும் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ஆரிய சமாஜத்தின் மூலம் இந்தியாவில் மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பங்களிப்பு அளப்பரியது என்றும், ‘வேதங்களுக்குத் திரும்புங்கள்’ என்பது அவரது அறைகூவல் என்றும் அவர் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா