2023,அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை மத்திய அரசால் நடத்தப்பட உள்ள தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சிறப்பு இயக்கம் 3.0 க்கான தயாரிப்புகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஆய்வு செய்தார்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இதே கருப்பொருளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களைப் போலவே, 2023 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மையை மேம்படுத்துவதற்கும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் சிறப்பு இயக்கம் 3.0க்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இயக்கத்தின் வெற்றிக்கு தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசின் அனைத்து செயலாளர்களுக்கும் அமைச்சரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறை நாடு முழுவதும் இயக்கத்தை ஒருங்கிணைப்பதற்கும் வழிநடத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் ஒருங்கிணைப்புத் துறையாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சிறப்பு இயக்கம் 2.0 நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு அலுவலகங்களை உள்ளடக்கி இருந்தது. இந்த அலுவலகங்கள் கூட்டாக சுமார் 89.8 லட்சம் சதுர அடி இடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தன. பயன்படாத பொருட்களை அகற்றுவதன் மூலம் ரூ.370.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 64.92 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. 4.56 லட்சம் மக்கள் குறை தீர்ப்பு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 8998 குறிப்புகளுக்கு பதிலளிக்கப்பட்டன.
சிறப்பு இயக்கம் 3.0 நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறை வெளியிட்டுள்ளது. சிறப்பு இயக்கம் இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்படும்.
எம்.பிரபாகரன்