2 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்குவதற்கான தேசிய மாநாட்டிற்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமை வகித்தார்.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை நிலையான வருமானம் ஈட்டும் சுய உதவிக் குழு பெண்களை உருவாக்குவதற்கான தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 கோடி ‘லட்சாதிபதி பெண்கள்’ -குறித்த தேசிய மாநாடு இன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். 2023, ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நிகழ்த்திய தமது சுதந்திர தின உரையில் இந்த லட்சிய இலக்கை அறிவித்தார். “இன்று 10 கோடி கிராமப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கிறார்கள். நீங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றால், வங்கி முகவர் பெண்கள்’, ‘அங்கன்வாடி பெண்கள்’, மருந்து முகவர் பெண்கள்’ ஆகியோரைக் காண்பீர்கள். கிராமங்களில் இரண்டு கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு” என்று பிரதமர் கூறினார்.

பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய திரு கிரிராஜ் சிங், பிரதமரின் கனவை கடின உழைப்பு மற்றும் பன்முக அணுகுமுறையுடன் காலவரையறைக்குள் நனவாக்க இந்த இயக்கம் உத்வேகம் காட்டுகிறது என்றார். லட்சாதிபதி பெண்கள் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைக்க முழு அரசு அணுகுமுறையையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்திய அரசின் முதன்மையான வறுமை ஒழிப்புத் திட்டமான தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஏழைகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய முன்முயற்சியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

போபாலில் இருந்து ஆன்லைனில் இணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு ஃபகன் சிங் குலாஸ்தே, பிரதமரின் கனவுப்படி லட்சாதிபதி பெண்கள் அமிர்த காலத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள் என்றார்.

பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில், லட்சாதிபதி பெண்கள் முன்முயற்சி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று இம்மாநாட்டில் வரவேற்புரையாற்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் திரு. சைலேஷ் குமார் சிங் தெரிவித்தார்.  சுய உதவிக் குழுவின் ஒவ்வொரு குடும்பமும் மதிப்புத் தொடர் தலையீடுகளுடன் பல வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது என்றும் இதன் விளைவாக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் கூடுதலாக நிலையான வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply