உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மூலம் உயிரி எரிபொருட்களில் இந்தியா உலகிற்கு ஒரு புதிய பாதையைக் காட்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார். சமூக ஊடக ‘எக்ஸ்’ தளத்தில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அமைச்சர், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற மந்திரத்தைப் பின்பற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் இந்த முயற்சி நிச்சயமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தித் துறையில் வரலாறு படைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜி20 உச்சிமாநாட்டின் போது உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை (ஜி.பி.ஏ) நேற்று தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டணியில் சேர 19 நாடுகளும், 12 சர்வதேச அமைப்புகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஜி.பி.ஏ என்பது உயிரி எரிபொருட்களை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் கூட்டணியை உருவாக்குவதற்கான இந்தியா தலைமையிலான முயற்சியாகும். நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து, உயிரி எரிபொருள் மேம்பாடு மற்றும் நிலைநிறுத்தலை ஊக்குவிக்கும் இந்த முன்முயற்சி, உயிரி எரிபொருட்களை, எரிசக்தி மாற்றத்திற்கான முக்கிய காரணியாக நிலைநிறுத்துவதையும், வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எம்.பிரபாகரன்