“காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு பரிந்துரையை ஏற்று தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

மேகதாதுவில் அணைக்கட்டியே தீருவோம் என்று கர்நாடாக முதல்வர் அவர்கள் கூறுவது ஒருபோதும் காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. பிரச்சனையில் கர்நாடகா அரசால் தமிழக விவசாயிகள் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறார்கள். கர்நாடாகாவில் வாக்கு வங்கி அரசியல் நடக்கிறது. தமிழகத்தில் கூட்டணி அரசியல் நடக்கிறது.

இதனுடைய முழு பாதிப்பு அப்பாவி தமிழக டெல்டா விவசாயிகள். தமிழக அரசு தேர்தல்,கூட்டணி, வெற்றி என்று கணக்குப் பார்க்காமல், மத்திய அரசை குறை கூறாமல், கர்நாடாகா அரசை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

நியாயத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அப்பாவி டெல்டா விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய முறையான தண்ணீரை சாக்குப் போக்கு சொல்லி, தவறான புள்ளிவிவரங்களை கொடுத்து கர்நாடாக காங்கிரஸ் அரசு மறைப்பதை, எதிர்த்து குரல்கொடுத்து அவர்களின் தவறை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

டெல்லியில் காணொளியின் மூலம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் இருந்து, தமிழகத்திற்கு உரிய தண்ணிரை பெற்றுத் தர கர்நாடாகா அரசுடன் உடனடியாக வலுவாகப் பேச வேண்டும். ஆயிரக்கணக்கான ஹெக்டர் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுவதை தடுக்க, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply