பாரதத்தின் அமிர்தக் காலத்தின் ஒரு மகத்தான பாரம்பரியத்திலிருந்து ஒரு புதிய அத்தியாயத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தை அறிமுகப்படுத்தும் வகையில், குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் இன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கஜ துவாரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.
இது ஒரு “வரலாற்றுத் தருணம் மற்றும் ஒரு மைல்கல் வளர்ச்சி” என்று விவரித்த குடியரசு துணைத் தலைவர், இந்தியா சகாப்த மாற்றத்தைக் காண்கிறது என்றும், பாரதத்தின் வலிமை, சக்தி மற்றும் பங்களிப்பை உலகம் முழுமையாக அங்கீகரித்துள்ளது என்றும் கூறினார்.
“நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியையும் சாதனைகளையும் காணும் காலங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று நமது கள யதார்த்தம் உலகளவில் மிகவும் சாதகமான முறையில் பிரதிபலிக்கிறது, “என்று அவர் ஊடகங்களிடம் பேசுகையில் கூறினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காண மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாநிலங்களவை மற்றும் மக்களவை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா