நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது மைய மண்டபத்தில் உறுப்பினர்களிடையே பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

இன்றைய சிறப்பு அமர்வின்போது நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  உறுப்பினர்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துப் பிரதமர் உரையைத் தொடங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் அவை நடவடிக்கைகள் இடம்பெறும் இன்றைய சந்தர்ப்பம் பற்றி அவர் குறிப்பிட்டார். “இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம்” என்று பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் மைய மண்டபம் பற்றிப் பேசிய பிரதமர், அதன் உத்வேகமூட்டும் வரலாறு குறித்தும் பேசினார். தொடக்க ஆண்டுகளில் கட்டிடத்தின் இந்தப் பகுதி ஒரு வகையான நூலகமாகப்  பயன்படுத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.  இந்த இடத்தில்தான் அரசியல் சாசனம் உருவானது என்பதையும், சுதந்திரத்தின் போது அதிகார மாற்றம் நடந்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் தேசியக் கொடியும், தேசிய கீதமும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். 1952-ம் ஆண்டுக்குப் பிறகு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 41 நாடுகள் மற்றும் அரசுத் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர்.  இந்தியாவின் பல  குடியரசுத் தலைவர்கள் 86 முறை மைய மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். கடந்த எழுபது ஆண்டுகளில் மக்களவையும் மாநிலங்களவையும் சுமார் நான்காயிரம் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன என்று அவர் கூறினார். கூட்டுக் கூட்டத் தொடரின் மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்தும் பேசிய அவர், வரதட்சணை தடுப்புச் சட்டம், வங்கிப் பணியாளர் தேர்வாணைய மசோதா மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார் . முத்தலாக் தடைச் சட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்கள் பற்றியும் திரு மோடி எடுத்துரைத்தார்.

எஸ் சதிஷ் சர்மா

Leave a Reply