2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. சமீபத்திய ஆய்வின்படி 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 1190.62 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 38.27 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை 148.27 லட்சமாக இருந்தது. மாதாந்திர வளர்ச்சி விகிதம் 23.13 சதவீதமாக உள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, இந்த துறையின் மீட்சித்திறன் மற்றும் தொற்றுப் பாதிப்பு சவாலில் இருந்து இத்துறை மீள்வதை பிரதிபலிக்கிறது.
ஆகஸ்ட் 2023-ல் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களில் ரத்து விகிதம் வெறும் 0.65 சதவீதம் வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 2023-ல், பயணிகளின் புகார்களும் குறைந்துள்ளன.
இத்துறையின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, பாதுகாப்பான, திறன்வாய்ந்த மற்றும் சூழலை மையமாக் கொண்ட விமானப் போக்குவரத்துச் சூழலை வளர்ப்பதில் விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூட்டு முயற்சிகள் ஒரு சான்றாகும் என்று கூறியுள்ளார். அதிகரித்து வரும் பயணத் தேவைகளுக்கு ஏற்ப பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதில் விமானப் போக்குவரத்துத் துறை உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எஸ் சதிஷ் சர்மா