ஐ.என்.எஸ். நிரீக்ஷாக், டைவ் பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து திருகோணமலையில் இருந்து புறப்பட்டது.

இந்திய கடற்படையின் டைவிங் சப்போர்ட் மற்றும் நீர்மூழ்கி மீட்பு கப்பல், ஐ.என்.எஸ் நிரீக்ஷாக், இலங்கை கடற்படையுடன் இணைந்து ஒரு வார டைவ் பயிற்சியை மேற்கொண்டது. பின்னர் செப்டம்பர் 21 அன்று திருகோணமலையில் இருந்து புறப்பட்டது. இரு கடற்படைகளின் டைவிங் குழுக்கள் விரிவான துறைமுகம் மற்றும் கடல் டைவிங் மேற்கொண்டன. மேலும், கப்பலின் ஊழியர்களுக்கும் இலங்கை கடற்படை ஊழியர்களுக்கும் இடையில் பரஸ்பர நலன்களின் பல்வேறு அம்சங்கள் குறித்த பயிற்சி உட்பட பல கலந்துரையாடல்கள் நடைபெற்றன. திருகோணமலை ஜூனியர் கமாண்ட் அண்ட் ஸ்டாஃப் கல்லூரியின் அதிகாரிகள் கப்பலை பார்வையிட்டனர். அவர்களுக்கு கப்பலின் டைவிங் திறன் குறித்து விளக்கப்பட்டது.

இலங்கையின் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பி.எஸ்.டி சில்வா கப்பலை பார்வையிட்டு, இலங்கை கடற்படை நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியக் கடற்படையின் ஆதரவைப் பாராட்டினார். இரு கடற்படைகளுக்கும் இடையே சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

திருகோணமலையில் உள்ள சிறுவர் பள்ளி ஒன்றில் பயிற்சி நடவடிக்கைகள் மட்டுமன்றி சமூக தொடர்பு செயல்பாடுகளும் இடம்பெற்றன. சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு இலங்கையின் டச்சு கடற்கரையில் கூட்டு கடற்கரை தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை வீரர்களுடன் கூட்டு யோகா அமர்வு மற்றும் நட்புறவு கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

1500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த கப்பலுக்கு வருகை தந்து பயிற்சி நடைமுறைகளை பார்வையிட்டனர்.

இந்த கப்பலின் இலங்கைப் பயணம் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான வலுவான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply