ஏற்காட்டில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டம்!  

ye0401P1

ஏற்காடு ஒண்டிக்கடை, அண்ணா சிலை அருகில், ஏற்காடு தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தோட்ட தொழிலாளர் சட்டங்களை திருத்த கூடாது, உரிமைகளை பறிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

ஆர்பாட்டம், சங்க பொருளாளர் டி.பழனிசாமி தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் தோட்ட தொழிலாளர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் கே.சி.கோபிகுமார் பேசும்போது, தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள சீட்டு, அடையாள அட்டை வழங்க வேண்டும், மேலும், தொழிலாளர்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட் பிடித்தம் செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

பின்னர் தோட்ட தொழிலாளர் சங்க சேலம் மாவட்ட துணை தலைவர் எஸ்.கண்ணாடி ராஜ் பேசும்போது, நிரந்தரம் மற்றும் நிரந்தரமற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால விடுமுறையின் போது அளிக்க வேண்டிய 3 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற அரசாணையை எஸ்டேட் நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டும், தோட்ட தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் மழை கோட்டுகள் வழங்க வேண்டும் என்றார்.

ஆர்பாட்டத்தில் தோட்ட தொழிலாளர் சங்க சேலம் மாவட்ட துணை தலைவர் எஸ்.செல்லப்பாண்டியன் உட்பட ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர். 

                                                        -நவீன் குமார்.