புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023’ ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்டத் தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக செயல்படுவதையும், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதையும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்த புரிதலை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உலகளாவிய சட்ட சகோதரத்துவத்தின் சிறந்தவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். இங்கிலாந்து சான்சலர் திரு அலெக்ஸ் சாக் மற்றும் இங்கிலாந்து பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், காமன்வெல்த் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 ‘வசுதைவ குடும்பகம்’ உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது என்றார். இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகித்த இந்திய வழக்குரைஞர் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் சட்டத்துறையின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். “பல ஆண்டுகளாக, நீதித்துறையும் வழக்கறிஞர்களும் இந்தியாவின் நீதித்துறையின் பாதுகாவலர்களாக உள்ளனர்”, என்று அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் சட்ட வல்லுநர்களின் பங்கையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர், பாபு ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், லோக்மான்ய திலகர், வீர சாவர்க்கர் ஆகியோரை அவர் உதாரணமாகக் கூறினார். “சட்டத் தொழிலின் அனுபவம் சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேலை செய்துள்ளது, மேலும் இன்றைய பாரபட்சமற்ற நீதி அமைப்பு இந்தியா மீதான உலகின் நம்பிக்கையை அதிகரிக்க உதவியது” என்று அவர் மேலும் கூறினார்.
பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளுக்கு தேசம் சாட்சியாக இருக்கும் நேரத்தில், சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெறுவதை சுட்டிக் காட்டிய பிரதமர், மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூர்ந்தார். “நாரி சக்தி வந்தன் சட்டம் இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்குப் புதிய திசையையும் ஆற்றலையும் வழங்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீபத்தில் புதுதில்லியில் நடந்து முடிந்த ஜி 20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றை உலகம் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு இதே நாளில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் முதல் நாடு இந்தியா என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், தன்னம்பிக்கை நிறைந்த இன்றைய இந்தியா, 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய பாடுபட்டு வருவதாக வலியுறுத்தினார். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய இந்தியாவில் உள்ள சட்ட அமைப்புக்கு வலுவான, சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற அடித்தளங்களின் தேவையையும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 மிகவும் வெற்றிகரமாக மாறும் என்றும், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பைப் பெறும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
எஸ் சதிஷ் சர்மா