ஜெய்ப்பூரில் சிறந்த நிர்வாகம் குறித்த 2 நாள் பிராந்திய மாநாட்டை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறையின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்து பேசுகையில், “வளர்ச்சியடைந்த” பாரதத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அமிர்த காலப் பயணத்தைப் பாராட்டினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா “வளர்ச்சியடைந்த” பாரதமாக உருவெடுக்கும் நுழைவாயிலில் உள்ளது என்றும், இந்த இலக்கை அடைவதற்கான அடித்தளம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் திறம்பட நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
குடிமக்களுக்கு சிறந்த நிர்வாகம் மற்றும் சேவைகளை திறம்பட வழங்குவதற்காக புதிய தலைமுறை தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதில் மோடி அரசு பல முன்னேற்றங்களை எடுத்துள்ளது. மேலும் இந்த நடைமுறைகளில் பல பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், இதனால் மற்றவர்களும் அதைப் பின்பற்ற முடியும் என்று அமைச்சர் கூறினார். முன்னோடி மாவட்டங்கள், விரைவு சக்தி மற்றும் கொவிட் தடுப்பூசி போன்ற இந்த சிறந்த நடைமுறைகள் முன்மாதிரிகளாக மாறியுள்ளன. மேலும் மற்ற நாடுகளாலும் மேற்கோள் காட்டப்படுகின்றன என்று அவர் கூறினார்.
“குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தல் மூலம் ‘அதிகபட்ச ஆளுமை – குறைந்தபட்ச நிர்வாகம்’ கொள்கை நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பதில் ஒரு நம்பிக்கையான இந்தியா வெளிப்படுகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான இந்த பயணத்தை நாம் தொடங்கும்போது, நமது குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும், மேலும் நாட்டின் செழிப்புக்கான முன்னேற்றத்திலிருந்து கடைசி நபர் கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஏப்ரலில் சிவில் சர்வீசஸ் தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், “இந்திய அரசின் அமைப்பு ஒவ்வொரு இந்தியரின் விருப்பங்களை ஆதரிப்பதும், ஒவ்வொருஅரசு ஊழியரும் ஒவ்வொரு குடிமகனின் கனவுகளை நனவாக்க உதவுவதும் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு முக்கியம்” என்று கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா