ராஜஸ்தானின் ஜோத்பூரில் சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம், உயர்கல்வி போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸில் 350 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை மையம். தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் 7 தீவிர சிகிச்சை பிரிவுகள், ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடத்தை உருவாக்குதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். ஐ.ஐ.டி ஜோத்பூர் வளாகத்தையும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அர்ப்பணித்தார். பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 145 கி.மீ தொலைவிலான தேகானா-ராய் கா பாக் மற்றும் 58 கி.மீ தொலைவிலான தேகானா-குச்சமான் நகர ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட மேலும் இரண்டு ரயில் திட்டங்களை அர்ப்பணித்தார். ஜெய்சால்மரை தில்லியுடன் இணைக்கும் ருனிச்சா எக்ஸ்பிரஸ், மார்வார் சந்திப்பு – காம்ப்ளி பகுதியை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் ஆகிய இரண்டு புதிய ரயில் சேவைகளை ராஜஸ்தானில் திரு மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வுக்கான கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வீர் துர்காதாஸின் மண்ணுக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்தினார். அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவுகளை இன்றைய திட்டங்களில் காணவும், அனுபவிக்கவும் முடியும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதற்காக ராஜஸ்தான் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் வீரம், செழிப்பு மற்றும் கலாச்சாரத்தில் பண்டைய இந்தியாவின் பெருமை கண்கூடாகத் தெரியும் ஒரு மாநிலம் ராஜஸ்தான் என்று பிரதமர் கூறினார். சமீபத்தில் ஜோத்பூரில் நடைபெற்ற மிகவும் பாராட்டப்பட்ட ஜி 20 மாநாட்டையும் அவர் நினைவு கூர்ந்தார். ஜோத்பூரின் சூரிய நகரம் உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் கடந்த காலப் பெருமையை பிரதிபலிக்கும் ராஜஸ்தான், இந்தியாவின் எதிர்காலத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துவது முக்கியம். மேவார் முதல் மார்வார் வரை, ஒட்டுமொத்த ராஜஸ்தானும் வளர்ச்சியின் புதிய உச்சத்தை எட்டும் போது மட்டுமே இது நிகழும் என்று பிரதமர் கூறினார்.
பிகானீர் மற்றும் பார்மர் வழியாக செல்லும் ஜாம்நகர் விரைவுச்சாலை தில்லி மும்பை விரைவுச்சாலை ஆகியவை ராஜஸ்தானில் உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டுகள் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ராஜஸ்தானில் ரயில்வேக்கு சுமார் ரூ.9500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய அரசுகளின் சராசரி பட்ஜெட்டை விட, 14 மடங்கு அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு 2014 வரை ராஜஸ்தானில் சுமார் 600 கி.மீ ரயில் பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசு ஏற்கனவே கடந்த 9 ஆண்டுகளில் 3700 கி.மீட்டருக்கும் அதிகத் தொலைவிலான ரயில் பாதைகளை மின்மயமாக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். “இப்போது, டீசல் எஞ்சின் ரயில்களுக்கு பதிலாக மின்சார ரயில்கள் இந்த தடங்களில் இயக்கப்படும்” என்று பிரதமர் கூறினார். இது மாசுபாட்டைக் குறைக்கவும், மாநிலத்தில் காற்றைத் தூய்மையாக வைத்திருக்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், ராஜஸ்தானில் 80-க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார். நாட்டில் விமான நிலையங்களின் மேம்பாட்டைப் போலவே ஏழைகள் அடிக்கடி பயன்படுத்தும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஜோத்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
இன்றைய ரயில், சாலைத் திட்டங்கள் மாநில வளர்ச்சியின் வேகத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். ரயில் பாதைகள் இரட்டிப்பாக்கப்பட்டதால் ரயில்களின் பயண நேரம் குறைக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், ஜெய்சால்மரை தில்லியுடன் இணைக்கும் ருனிச்சா எக்ஸ்பிரஸ், மார்வார் ஜங்ஷன் – காம்ப்ளி காட் ஆகியவற்றை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் மற்றும் சில நாட்களுக்கு முன்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்ததுப்பற்றி எடுத்துரைத்தார். இன்று 3 சாலைத் திட்டங்களுக்கும், ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இன்றைய திட்டங்கள் பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உத்வேகம் அளிக்கும் என்றும், அதே நேரத்தில் மாநிலத்தில் சுற்றுலாத் துறைக்கு புதிய ஆற்றலை வழங்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் ராஜஸ்தானின் சிறப்பினை நினைவு கூர்ந்த பிரதமர், கோட்டாவின் பங்களிப்பைக் குறிப்பிட்டு, கல்வியுடன், ராஜஸ்தான் மருத்துவம் மற்றும் பொறியியலின் மையமாக மாறுகிறது என்று கூறினார். இதற்காக ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ‘விபத்து சிகிச்சை, அவசர மற்றும் தீவிர சிகிச்சை’ வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் ராஜஸ்தான் முழுவதும் பிரதமரின் – ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் (பி.எம்-அபிம்) கீழ் ஏழு தீவிர சிகிச்சை பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. “எய்ம்ஸ் ஜோத்பூர், ஐ.ஐ.டி ஜோத்பூர் ஆகியவை ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாட்டின் முதன்மையான நிறுவனங்களாகக் காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் கூறினார். எய்ம்ஸ் மற்றும் ஐஐடி ஜோத்பூர் இணைந்து மருத்துவ தொழில்நுட்பத் துறையில் புதிய சாத்தியக்கூறுகள் குறித்த பணிகளைத் தொடங்கியுள்ளன. ரோபோ முலமான அறுவை சிகிச்சை போன்ற உயர் தொழில்நுட்ப மருத்துவ தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையில் இந்தியாவுக்குப் புதிய உச்சத்தை வழங்கும். இது மருத்துவச் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்”, என்று அவர் மேலும் கூறினார்.
“இயற்கையையும் சுற்றுச்சூழலையும் நேசிப்பவர்களின் பூமி ராஜஸ்தான்” என்று கூறிய பிரதமர், பல நூற்றாண்டுகளாக இந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வரும் குரு ஜம்பேஷ்வர், பிஷ்னோய் ஆகியோரின் சமூக முறையை எடுத்துரைத்தார். “இந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில், இந்தியா இன்று முழு உலகையும் வழிநடத்துகிறது”, என்று பிரதமர் கூறினார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசின் முயற்சிகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், ராஜஸ்தானின் வளர்ச்சியால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் என்று கூறினார். “நாம் ஒன்றிணைந்து ராஜஸ்தானை மேம்படுத்தி வளமானதாக மாற்ற வேண்டும்” என்று திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, மத்திய அமைச்சர்கள் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், திரு கைலாஷ் சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
ராஜஸ்தானில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கியமான திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ஜோத்பூர் விமான நிலையத்தில் அதிநவீன புதிய முனையக் கட்டடத்தின் வளர்ச்சிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.480 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த புதிய முனைய கட்டிடம் சுமார் 24,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படும். மேலும் நெரிசல் நேரங்களில் 2,500 பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் வகையில் இருக்கும். இது ஆண்டுக்கு 35 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும், இணைப்பை மேம்படுத்தும் மற்றும் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும்.
ஐஐடி ஜோத்பூர் வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.1135 கோடிக்கும் கூடுதலான செலவில் அதிநவீன வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது உயர்தர முழுமையான கல்வியை வழங்குவதற்கும், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முன்முயற்சிகளை ஆதரிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஒரு படியாகும்.
ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘மத்திய கருவி ஆய்வகம்’, பணியாளர் குடியிருப்புகள் மற்றும் ‘யோகா மற்றும் விளையாட்டு அறிவியல் கட்டிடம்’ ஆகியவற்றைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் மத்திய நூலகம், 600 இருக்கைகள் கொண்ட விடுதி மற்றும் மாணவர்களுக்கான உணவு வசதி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ராஜஸ்தானில் இரண்டு புதிய ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெய்சால்மரை தில்லியுடன் இணைக்கும் புதிய ரயில் – ருனிச்சா எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வார் ஜங்ஷன் – காம்ப்ளி பகுதியை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் ஆகியவை இதில் அடங்கும்.
எம்.பிரபாகரன்