மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் இன்று புதுதில்லியில் இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த சில ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றி அடைந்துள்ளதாகவும், இப்போது இந்த முயற்சி ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது என்றும் கூறினார்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிராக பெரிய வெற்றிகள் எட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். அடுத்த 2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டிலிருந்து இடதுசாரி தீவிரவாதிகளின் பகுதிகள் சுருங்கி வருவதாகவும், 195 புதிய சிஏபிஎஃப் முகாம்களை நிறுவியுள்ளோம் என்றும், மேலும் 44 புதிய முகாம்கள் நிறுவப்படும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.
இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய ஆயுத போலீஸ் படைகளை (சிஏபிஎஃப்) நிலைநிறுத்துவது, வளர்ச்சியை சீரமைப்பது மற்றும் வெற்றிடமான பகுதிகளில் முகாம்களை அமைப்பது ஆகியவை மோடி அரசின் முன்னுரிமைகள் என்று திரு ஷா கூறினார்.
இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது என்ற கொள்கையை 2014 முதல் மோடி அரசு கடைப்பிடித்து வருகிறது என்று திரு அமித் ஷா கூறினார். இதன் விளைவாக, கடந்த 4 தசாப்தங்களில் 2022 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த அளவிலான வன்முறை மற்றும் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார். 2005 முதல் 2014 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2014 முதல் 2023 வரை இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளில் 52 சதவீதத்திற்கும் அதிகமாகவும், இறப்புகளில் 69 சதவீதத்திற்கும் அதிகமாகவும், பாதுகாப்புப் படை இறப்புகளில் 72 சதவீதமாகவும், பொதுமக்கள் இறப்புகளில் 68 சதவீதத்திற்கும் அதிகமாகவும் குறைந்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் அனைத்து மாநில அமைப்புகளுடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளர், மத்திய ஆயுத போலீஸ் படைகளின் (சிஏபிஎஃப்) தலைமை இயக்குநர்கள், மத்திய அரசின் செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா