மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (என்.சி.எம்.சி) இன்று (09.10.2023) புதுதில்லியில் கூடி சிக்கிமில் நிலவும் நிலைமையை ஆய்வு செய்தது.
இந்த கூட்டத்தில் சிக்கிம் மாநில தலைமைச் செயலாளர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வானிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவாக, மக்களை வெளியேற்றுவது மற்றும் விமானம் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். இன்று காலை 80 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 28 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 6,800-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள், மருந்துகள், எல்பிஜி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
அக்டோபர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வானிலை சாதகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் தெரிவித்தார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநிலத்தில் 6 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மீட்புப்படையின் தலைமை இயக்குநர் கூறினார். சிலிகுரியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 ரிசர்வ் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
நிலைமையை மத்திய அரசு உயர் மட்ட அளவில் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக உள்துறை செயலாளர் கூறினார். நிலைமையை மதிப்பிடுவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழு (ஐ.எம்.சி.டி) சிக்கிம் சென்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். சிக்கிம் அரசுக்கு தேவையான கூடுதல் மத்திய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய முகமைகள் மற்றும் சிக்கிம் அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா, மக்களை விரைந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அமைச்சரவை செயலாளர் உறுதியளித்தார்.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், சிக்கிம் மாநில தலைமைச் செயலாளர், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர், ராணுவ விவகாரங்களுக்கான செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்.பிரபாகரன்