தமிழகத்தில் தொடர்ந்து ஏற்படும் பட்டாசு ஆலை தீ விபத்து மீண்டும் ஏற்படாதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

பெரம்பலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே வெற்றியூரில் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர்கள் இறந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் ஏற்பட்ட பட்டாசுக் கடை தீ விபத்தில் 4 பேர்களும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 14 பேர்களும் உயிழந்தனர். அந்த சோகச் சுவடுகள் மாறுவதற்குள் இன்று அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகில் வெற்றியூரில் ஏற்பட்ட தீ விபத்தில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர் என்று வரும் செய்தி மிகுந்த வருத்ததை தருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்நேரத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு தயாரிப்பு பணியில் அதிக அளவில் ஈடுபடுகின்றார்கள். இதுபோன்ற பட்டாசு ஆலைகள், தமிழக அரசிடம் உரிய அனுமதிப் பெற்று, பாதுகாப்பு கோட்பாடுகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பு கோட்பாடுகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று விபத்து மீண்டும் நடைபெறாதவாறு அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply