பாரத் ஹே ஹம் என்ற அனிமேஷன் தொடரின் முன்னோட்டக் காட்சியை அனுராக் தாக்கூர் வெளியிட்டார் .

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள்  தொடர்பகம், கிராஃபிட்டி ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்த இரண்டு பருவங்களைக் கொண்ட அனிமேஷன் தொடரான கே.டி.பி- பாரத் ஹே ஹம் தொடரின் முன்னோட்டக் காட்சியை  மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று வெளியிட்டார்.  1500 முதல் 1947 வரையிலான இந்திய சுதந்திரப் போராட்டக் கதைகளைக் கொண்ட இந்தத் தொடர் 52 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தொடரும் 11 நிமிட கதைகளைக் கொண்டது. இந்தத் தொடரில் புகழ்பெற்ற அனிமேஷன் கதாபாத்திரங்களான க்ரிஷ், திரிஷ் மற்றும் பால்டி பாய் தொகுத்து வழங்குகின்றனர். இந்த தொடரை கிராஃபிட்டி ஸ்டுடியோவைச் சேர்ந்த முஞ்சல் ஷெராஃப் மற்றும் திலக்ராஜ் ஷெட்டி ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் அறியப்படாத ஆனால் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள், கடந்த கால கல்வி முறையால் மறக்கப்பட்ட பங்களிப்பாளர்கள் மற்றும் போதுமான அளவு புகழ் வெளிச்சம் படாத பங்களிப்பாளர்கள் குறித்து இளைஞர்களுக்கு கற்பிக்கும் ஒரு முயற்சியாகும் என்று கூறினார்.

“அதே நேரத்தில் நவீன இந்தியாவை வடிவமைத்தவர்களின் கதையைக் கொண்டு வந்து இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முயற்சியை இந்தத் தொடர் மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு மொழிகள் உட்பட பல மொழிகளில் வெளியாகும் இந்தத் தொடர், மொழித் தடைகளைத் தாண்டி அவர்களின் கதைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்”, என்று அவர் மேலும் கூறினார்.

தூர்தர்ஷன், நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவை இந்த அனிமேஷன் தொடரை ஒரே நேரத்தில் ஒளிபரப்பும் என்று திரு தாக்கூர் குறிப்பிட்டார். இது இதற்கு முன்பு மேற்கொள்ளப்படாத முயற்சியாகும். வெளிநாட்டு காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் மற்றும் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு இந்த தொடரின் முக்கிய மையப்புள்ளியாகும்.

இந்தத் தொடர் அடுத்த அமர்வின் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் காண்பிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஐந்து உறுதிமொழிகளை மீண்டும் வலியுறுத்திய அவர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களைத் தியாகம் செய்த அதே வேளையில், இன்றைய இளைஞர்கள் இந்த நாட்டை அமிர்த காலத்தில் இருந்து ஸ்வர்ணகாலம் வரை கொண்டு செல்ல தங்கள் முயற்சியில் பங்களிக்க வேண்டும் என்று கூறினார்.

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இது அமைச்சகத்திற்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும் என்றார். பொதுவாக இந்திய மக்களையும் குறிப்பாக நாட்டின் குழந்தைகளையும் இலக்காகக் கொண்ட ஒரு அனிமேஷன் தொடரை தொடங்குவது இதுவே முதல் முறையாகும். செலவின அமைப்பான மத்திய மக்கள் தொடர்பகம் வருவாய் ஈட்டும் துறையில் நுழைவது இதுவே முதல் முறை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கேடிபி-பாரத் ஹே ஹம் பற்றி

நமது பெருமைமிகு சுதந்திரப் போராட்டம் குறித்தும், நம் நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மாவீரர்கள் குறித்தும் இந்தியக் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரத்தை உருவாக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்தது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும், கே.டி.பி மூவி தொடரில் பிரபலமான கதாபாத்திரங்களான க்ரிஷ், திரிஷ் மற்றும் பால்டிபாய் ஆகியோர் இருப்பார்கள். இந்த அதிகம் அறியப்படாத ஹீரோக்களின் கதைகளை  முன்னோட்டமாக அவர்கள் தொடங்குவார்கள்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பன்முகத்தன்மையைத் தழுவிய இந்தத் தொடர், இமாச்சலப் பிரதேசம், வங்காளம், பஞ்சாப், கேரளா மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்ட பல்வேறு பிராந்தியங்கள் வழியாக பயணிக்கும். மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் கிராஃபிட்டி ஸ்டுடியோவால் இந்தத் தொடர் தயாரிக்கப்பட்டது.

ராணி அப்பக்கா, தில்கா மாஞ்சி, தீரத் சிங், பீர் அலி, தாத்யா டோப், கொத்வால் தன் சிங், குன்வர் சிங் (80 வயது சுதந்திர போராட்ட வீரர்), ராணி சென்னம்மா, திகேந்திர ஜீத் சிங் போன்ற எண்ணற்ற வீர ஆளுமைகள் இறுதியாக இந்த அனிமேஷன்  தொடர் மூலம் வரலாற்றில் தங்கள் சரியான இடத்தைப் பெறுவார்கள்.

இத்தொடர் இந்தி (மாஸ்டர்), தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, அசாமி, ஒடியா, ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில் தயாரிக்கப்படுகிறது:

இந்தத் தொடர் பின்வரும் சர்வதேச மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும்:

ஃபிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷ்யன், அரபிக், சீனம், ஜப்பான், கொரியா ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

சேனல் சீசன் ஒளிபரப்பு தொடக்கம் ஒளிபரப்பு  முடிவு
தூர்தர்ஷன் சீசன் 1 ஞாயிறு அக்டோபர் 15, 2023 ஞாயிறு ஜனவரி 7, 2024
சீசன் 2 ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28, 2024 ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21, 2024

ஓடிடியில், இந்த தொடர் ஒரு வரலாற்று தொடக்கத்தைக் காணும், ஏனெனில் முதல் முறையாக ஒரு தொடர் இரண்டு பெரிய ஓடிடி தளங்களான நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் இணையாக வெளியிடப்படுகிறது, மேலும் உலகளவில் 12 இந்திய மற்றும் 7 சர்வதேச மொழிகளில் வெளியிடப்படுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply